திருவாரூர் மாவட்டத்தில், ‘புரெவி’ புயலால் 2-வது நாளாக கொட்டி தீர்த்தது கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்; நெற்பயிர்களும் முழ்கின


திருவாரூர் மாவட்டத்தில், ‘புரெவி’ புயலால் 2-வது நாளாக கொட்டி தீர்த்தது கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்; நெற்பயிர்களும் முழ்கின
x
தினத்தந்தி 4 Dec 2020 7:17 AM IST (Updated: 4 Dec 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ‘புரெவி’ புயலால் 2-வது நாளாக கன மழை கொட்டி தீர்த்தது. குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். நெற்பயிர்களும் மழைநீரில் மூழ்கின

திருவாரூர்,

வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயலின் தாக்கம் இலங்கையை தொடர்ந்து தமிழகத்திலும் எதிரொலித்தது. புரெவி புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக இடைவிடாது கன மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் காட்டாறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சிரமப்படுத்திய மழைநீர்

ஏற்கனவே குண்டும், குழியுமாக காட்சி அளித்த சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தியது. புதிதாக உருவாக்கப்பட்ட நகர பகுதியில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையின் காரணமாக கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகள் முடங்கியதால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்தனர்.

தொடர் மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. பல இடங்களில் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் கடலோர பகுதியான முத்துப்பேட்டை பகுதி மீனவர்கள் நேற்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

குடியிருப்புகளில் வெள்ளம்

திருவாரூரில் கன மழையின் காரணமாக தஞ்சை சாலை வன்மீகபுரம் காமராஜ் தெருவில் மழை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வீடுகளை சுற்றி குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த பகுதியில் உள்ள வடிகால் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் வடிய வாய்ப்பு இல்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் இங்கு உள்ள பெரும்பாலான கூரை வீடுகளின் மண் சுவர் இடியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி வடிகாலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவாரூர் பகுதியில் மழை காரணமாக ஊழியர்கள் வேலைக்கு வராததால் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மன்னார்குடி

மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை மிதமான அளவில் பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை முதல் வலுவடைந்து கனத்த மழையாக பெய்ய தொடங்கியது. கனமழையால் மன்னார்குடி 30-வது வார்டு அந்தோணியார் கோவில் தெரு, 33-வது வார்டு இரட்டை குளம் பகுதி, கோபாலசமுத்திரம் தெற்கு வீதி, காந்திரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

மன்னார்குடி அருகே ஏத்தகுடி பாரதியார் நகரில் மழைநீர் வடிய வடிகால் இல்லாததால் குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்தது. இடையர் எம்பேத்தி கிராமத்தில் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கின.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று 2-வது நாளாக கனமழை பெய்தது. உச்சுவாடி கிராமத்தில் 160 ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் கனமழையால் பயிர்கள் சாய்ந்து காணப்படுகிறது. சில இடங்களில் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது.

உடனடியாக வெளியேற்ற முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், தொடர்ந்து கனமழை பெய்தால் நெற்பயிர்கள் முழுமையாக மூழ்கி சேதமடைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

நீடாமங்கலம்-திருத்துறைப்பூண்டி

நீடாமங்கலம் பகுதியில் நேற்று குளிர்ந்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. மழை காரணமாக நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக நெல் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிப்படைந்தனர்.

தாழ்வான இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் நேற்று கனமழை பெய்ததால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடு போல காட்சி அளித்தன. பழைய பஸ் நிலையம் அருகே ராமர் மடத் தெரு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. மழையால் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கொட்டித்தீர்த்த மழையினால் திருமக்கோட்டை தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை, எடையூர், பின்னத்தூர், மஞ்சுகோட்டகம், மேலநம்மங்குறிச்சி, வடசங்கேந்தி, மேட்டுக்கோட்டகம், தோலி, குன்னலூர் ஆகிய பகுதியில் தொடர் மழை காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. முத்துப்பேட்டையை அடுத்த பின்னத்தூர் தெற்கு காலனி தெருவில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபகுதியை சேர்ந்த ராஜலட்சுமி (60) என்பவருடைய வீட்டின் ஒரு பக்க சுவர் மழையால் இடிந்து விழுந்தது. இதில் அவரும், அவருடைய குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், ஒன்றிய கவுன்சிலர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட கும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

கோட்டூர்

கோட்டூர் அருகே உள்ள களப்பால், சீலத்தநல்லூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மேடான பகுதிகளில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். தாழ்வான பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்குவதற்கு அரசு சார்பில் எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவித்தனர்.

தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- திருத்துறைப்பூண்டி-130, குடவாசல்-100, திருவாரூர்-93, நன்னிலம்-80, வலங்கைமான்-76, மன்னார்குடி-71, நீடாமங்கலம்-65, பாண்டவயாறு தலைப்பு-61, முத்துப்பேட்டை-42.

Next Story