வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம்,
விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், இலவச மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும், இதற்காக டெல்லியில் ஜனநாயக முறையில் போராடி வரும் விவசாயிகள் மீது காவல்துறை மற்றும் ராணுவம் மூலமாக தாக்குதல் நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், இன்பஒளி, ராமச்சந்திரன், சகாபுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது விழுப்புரம் நகரில் சாரல் மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் நாராயணன், முருகன், செல்வராஜ், பாலசுப்பிரமணி, தனுசு, ராமநாதன், பாலமுருகன், நிதானம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கண்டமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story