ஓசூரில், கடத்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளர் மீட்பு - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


ஓசூரில், கடத்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளர் மீட்பு - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Dec 2020 5:30 PM IST (Updated: 4 Dec 2020 5:17 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் காரில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளர் மீட்கப்பட்டார். அவரை கிருஷ்ணகிரி அருகில் மர்ம கும்பல் இறக்கி விட்டு சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா அண்ணாமலை நகர் மெயின் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் லூயிஸ் (வயது 44). இவர் ஓசூர் சிப்காட்டில் உள்ள ஏசியன் டொபாக்கோ நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல தனது காரில் பணிக்கு சென்றார். இரவு 7 மணி அளவில் பணியை முடித்துக் கொண்டு காரில் தனது நிறுவனத்தில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 4 பேர், அவரை கத்தி முனையில் மிரட்டி காருடன் கடத்தி சென்றார்கள்.

இதை நிறுவன வாசலில் நின்ற சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் இது குறித்து அவரது மனைவி சுகன்யா பிரின்சிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

கடத்தப்பட்ட மேலாளர் பீட்டர் லூயிசை, அவர் ஓட்டிச் சென்ற காரிலேயே மர்ம நபர்கள் கடத்தி சென்றார்கள் என்பதால் அந்த கார் குறித்து மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த கார் எந்த வழியாக செல்கிறது? என போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் பார்த்தனர். அதே நேரத்தில் பீட்டர் லூயிசின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அவரை கடத்திய கும்பல் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் அவரை விடுவித்தனர். காரில் இருந்து இறங்கிய அந்த கும்பல் பின்னால் வந்த வேறு ஒரு காரில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதைத்தொடர்ந்து பீட்டர் லூயிஸ் கந்திகுப்பத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு காரில் சென்றார். அங்கிருந்து தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஓசூர் சிப்காட் போலீசார் அவரை மீட்டு வந்தார்கள்.

விசாரணையில் பீட்டர் லூயிசை கடத்திய கும்பல் அவரது கண் மற்றும் வாயில் துணியால் கட்டி அழைத்து சென்றது தெரிய வந்தது. அவரிடம் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியதாகவும், போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த அந்த கும்பல் அவரை இறக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது. பீட்டர் லூயிசிற்கு வேறு யாருடனும் பிரச்சினை இருந்ததா? அதனால் இந்த சம்பவம் நடந்ததா? என ஓசூர் சிப்காட் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story