சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் - மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பேட்டி


சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் - மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2020 5:15 PM IST (Updated: 4 Dec 2020 6:22 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் (ஜனவரி) கட்சி தொடங்குவதாக நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, நாச்சிக்குப்பம் மற்றும் காவேரிப்பட்டணத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.வி.எஸ் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.

மாவட்ட துணை செயலாளர்கள் பாபா மாதையன், மாவட்ட செயற்குழு ஆர்.ஆர்.முத்து, ரஜினி நாகராஜ், மகளிரணி சுபலட்சுமி, இளைஞரணி அரிஸ், வக்கீல் அணி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ். சீனிவாசன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி அமைத்திட, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் காக்கவே, ரஜினிகாந்த் கட்சியை தொடங்க உள்ளார். ரஜினியின் பூர்வீக மாவட்டமான கிருஷ்ணகிரியில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும். இதற்காக அயராது உழைக்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சிவா, ராஜேஷ்குமார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஓசூரில் ரஜினி மக்கள் மன்ற நகர செயலாளர் பாண்டியன் தலைமையில், ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், ரஜினி மக்கள் மன்ற ஓசூர் ஒன்றிய செயலாளர் மஞ்சுநாத் ராவ், நகர இணை செயலாளர் குமார், ஒன்றிய இணை செயலாளர் முருகன், சத்யா, சரவணன், புஷ்பராஜன், ரமேஷ், மாரியப்பன், அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், மன்றத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல், சூளகிரியில் ஒன்றிய செயலாளர் நந்தீஸ்குமார் தலைமையில் ரவுண்டானா அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் மன்றத்தின் நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் ஒன்றிய இணைச் செயலாளர் குணசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜினி சங்கர், நகர வர்த்தக அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராஜ், அருணாசலம், நகர துணைச்செயலாளர் ஆண்டனி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் கிரி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மேலும் மாவட்டம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கப்பட்டன.

Next Story