சூடுபிடிக்கும் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு: பழனி முருகன் கோவில் ஊழியர்களிடம் மீண்டும் போலீசார் விசாரணை
பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பாக, கோவில் ஊழியர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
பழனி,
பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. இந்த சிலை சேதமடைந்ததாக கூறி, கடந்த 2004-ம் ஆண்டு 200 கிலோவில் ஐம்பொன்னாலான உற்சவர் சிலை செய்யப்பட்டு, நவபாஷாண சிலைக்கு முன்பு வைத்து பூஜைகள் நடந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, ஐம்பொன் சிலை செய்யப்பட்டதில் மோசடி நடந்ததாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அப்போதைய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிலை செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதையை கோவில் இணை ஆணையர் கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலுக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் தலைமறைவானார். இதற்கிடையே அவருக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. பின்னர் ஸ்தபதி முத்தையா, கே.கே.ராஜா ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதையடுத்து உலோகவியல் பேராசிரியர் குழு துணையோடு நவீன கருவிகளை கொண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐம்பொன் சிலையை சோதனை செய்தனர். பின்னர் சிலையை தஞ்சை கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பணி ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலையே ஐம்பொன் சிலை மோசடி வழக்கை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட்டு நியமித்தது.
இதையடுத்து பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பழனியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பழனி முருகன் கோவில் மூலவர் நவபாஷாண சிலையை கடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.யாக அன்பு என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பணிக்கு வந்த பின்பு பழனி முருகன் கோவில் சிலை மோசடி தொடர்பாக எந்தவித விசாரணையும் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாதவன் தலைமையில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் பழனிக்கு நேற்று வந்தனர். தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த அவர்கள், தற்போது பழனி முருகன் கோவிலில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள், ஊழியர்கள் என சுமார் 20 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், ஐம்பொன் சிலை செய்யப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டபோது, பணியாற்றிய விவரம் குறித்து விசாரித்தனர் என்று கூறப்படுகிறது. ஓராண்டுக்கு பிறகு பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு விசாரணையை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் தொடங்கியுள்ளது பழனி முருகன் கோவில் அதிகாரிகள், ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.
Related Tags :
Next Story