அரசு துறை அதிகாரிகளுடன் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை


அரசு துறை அதிகாரிகளுடன் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
x
தினத்தந்தி 4 Dec 2020 9:30 PM IST (Updated: 4 Dec 2020 9:06 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்கு அரசு முதன்மை செயலாளரும், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கார்த்திக், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் புயல் பாதிப்புகள் அதிகம் இருக்கக்கூடும் என அறிவித்ததன் அடிப்படையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அரசுத்துறைகளும் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கென கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக் கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 43 பகுதிகளை கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில் பொதுமக்களை தங்க வைத்திட அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள 66 தங்கும் இடங்களை தயார் நிலையில் வைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, பெரியகுளம் சப்- கலெக்டர் சினேகா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்தின் அரசியல் வருகை, அவர் தொடங்கும் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தொகுதி பங்கீடு குறித்து நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு அவர், “அ.தி.மு.க. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. யார் அரசியலுக்கு வந்தாலும் அ.தி.மு.க. ஆலமரமாக இருந்து மக்களுக்கு சேவையாற்றும் இயக்கமாக இருக்கும். முதலில் ரஜினிகாந்த் அரசியல் ரீதியான இயக்கம் ஆரம்பிக்கட்டும். தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி சிந்திப்போம்“ என்றார்.

மேலும் அவரிடம், “அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினிகாந்த் பொதுவான நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறதே?. கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளர் யார்“ என்று நிருபர்கள் கேட்டதற்கு, “குழந்தை பிறந்த பின்னர் தான் பெயர் வைக்க முடியும்“ என்றார்.

Next Story