மாவோயிஸ்டு நடமாட்டத்தை கட்டுப்படுத்த 3 மாநில வனத்துறையினர் ஆலோசனை
மாவோயிஸ்டு நடமாட்டத்தை கட்டுப்படுத்த 3 மாநில வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.
கூடலூர்,
தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா சரணாலயம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவை 3 மாநிலங்கள் இணையும் இடங்களில் அருகருகே அமைந்து உள்ளன. இங்கு காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இது தவிர சந்தனம், ரோஸ்வுட், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. மாநில எல்லைகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் வன குற்றங்களை தடுக்க வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கேரளா, கர்நாடகா மாநில வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து விட்டதால் இனி வரும் மாதங்கள் கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வனப்பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், மாவோயிஸ்டு நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் 3 மாநிலங்களை சேர்ந்த முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர் வனத்துறையினர் நேற்று முன்தினம் மாநில எல்லைகள் இணையும் இடத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர்கள் தயானந்தன், சிவக்குமார், முத்தங்கா சரணாலய வனச்சரகர் சுனில் குமார், கர்நாடகாவின் மூலஹல்லா வனச்சரகர் மகாதேவ் மற்றும் வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது வனப்பகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டத்தை கண்டறிந்து போலீசுக்கு தகவல் கொடுப்பது, எதிர் வரும் நாட்களில் வறட்சியான காலநிலை தொடங்க உள்ளதால் காட்டுத்தீ பரவாமல் தடுக்க இணைந்து செயல்படுவது, பழைய மற்றும் புதிய வன குற்றவாளிகளை கண்டறிந்து மீண்டும் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது. வனங்களை பாதுகாக்கும் பணியில் 3 மாநில வனத்துறையினரும் இணைந்து செயல்படுவது, தகவல்களை உடனுக்குடன் பரிமாறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story