கொரோனாவில் இருந்து மீள்கிறது: கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு


கொரோனாவில் இருந்து மீள்கிறது: கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2020 3:45 PM GMT (Updated: 4 Dec 2020 4:27 PM GMT)

கொரோனாவில் இருந்து மீள்வதால் கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கோவை,

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு முன் சராசரியாக ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை பயன்படுத்தி வந்தனர்.

கொரோனா தொற்று பரவலுக்கு பின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களை தொடர்ந்து கடந்த மே மாதம் உள்நாட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இருந்தபோதிலும் கடந்த மே மாதம் 4 ஆயிரத்து 511 பேர் மட்டுமே கோவை விமான நிலையம் வழியாக பயணம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 28 ஆயிரத்து 314 பேரும், ஜூலையில் 30 ஆயிரத்து 644 பேரும், ஆகஸ்டு மாதத்தில் 44 ஆயிரத்து 786 பேரும், செப்டம்பர் மாதத்தில் 66 ஆயிரத்து 792 பேரும், அக்டோபரில் 76 ஆயிரத்து 470 பேர் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 517ஆக பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர் மகாலிங்கம் கூறியதாவது:-

கொரோனாவுக்கு முன்பு கோவை விமான நிலையத்தை ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் பயன்படுத்தி வந்தனர். நோய் தொற்று பரவலுக்கு பின் விமானங்கள் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உள்நாட்டு போக்குவரத்து மட்டும் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த மே மாதம் 4 ஆயிரத்து 511 பேர் மட்டுமே பயணம் செய்தனர். தொடர்ந்து மாதந்தோறும் படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து கடந்த அக்டோபரில் 76 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். எனவே இனிவரும் மாதங்களில் விரைவில் கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story