கோவை மாவட்டத்துக்கு தி.மு.க. செய்தது என்ன? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி


கோவை மாவட்டத்துக்கு தி.மு.க. செய்தது என்ன? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி
x
தினத்தந்தி 4 Dec 2020 10:15 PM IST (Updated: 4 Dec 2020 10:04 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்துக்கு தி.மு.க. செய்தது என்ன? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

கோவை,

கோவை-அவினாசி சாலையில் 10.10 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து கோவையிலிருந்து தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 46 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஏழு 108 இலவச ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாடுகளையும் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொங்கு மக்களின் 60 ஆண்டு கால அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன்பு அந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதை செய்தார்களா?. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றுமாறு முதல்-அமைச்சரிடம் நான் கேட்டபோது பணம் அதிகம் செலவாகும் என்று கூறினார். ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற உங்களால்தான் முடியும் என்று கூறிய பின்னர் அந்த திட்டத்தை நிறைவேற்ற நிதிஉதவி அளித்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. கோவை மாவட்டத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை தி.மு.க.வினர் குறை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எதற்காக மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களுக்கு பணியாற்றத் தான்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். அதுபோல இப்போதும் மக்களை ஏமாற்ற தி.மு.க.வினர் முயற்சி செய்கிறார்கள். இதெல்லாம் தெரியாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் யாரோ எழுதி கொடுத்ததை படித்துக் கொண்டிருக்கிறார். எனவே வருகிற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று எப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தாரோ அப்போதே எடப்பாடிதான் அடுத்த முதல்-அமைச்சர் என்று உறுதியாகி விட்டது.

கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களையும் மாவட்டந்தோறும் முதல்-அமைச்சர் நேரடியாக சென்று சந்தித்து உதவிகள் செய்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார். அவரை விட பல மடங்கு அதிக திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story