வடகரை பகுதியில் தோட்டங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் 100 தென்னை மரங்களை சாய்த்தன
வடகரை பகுதியில் தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தின.
அச்சன்புதூர்,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான சீவலன்காடு, சென்னாபொத்தை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மா, வாழை, தென்னை, நெல், நெல்லி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் மலைப்பகுதியில் உள்ள யானை, மிளா உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
நேற்று முன்தினம் இரவில் வடகரை சீவலன்காடு, சென்னாபொத்தை பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்த 2 காட்டு யானைகள், அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மலை அடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். மலை அடிவார பகுதியில் உள்ள மின்கம்பி வேலியை சீரமைக்க வேண்டும். காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகாதவாறு மலையடிவாரத்தைச் சுற்றிலும் அகழி அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story