மாவட்ட செய்திகள்

போலீஸ் வேலை கிடைத்ததை காரணம் காட்டி திருமணம் செய்ய காதலன் மறுப்பு - இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Citing the reason the police got the job Boyfriend refuses to marry Young woman commits suicide

போலீஸ் வேலை கிடைத்ததை காரணம் காட்டி திருமணம் செய்ய காதலன் மறுப்பு - இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

போலீஸ் வேலை கிடைத்ததை காரணம் காட்டி திருமணம் செய்ய காதலன் மறுப்பு - இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
எலந்தூர் தாலுகாவில், போலீஸ் வேலை கிடைத்ததை காரணம் காட்டி காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா ஹொன்னூர் பீச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி(வயது 19). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டாருக்கும் தெரியவந்தது. அதன்பேரில் இருவரது வீட்டாரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர்.

இதனால் காதல் ஜோடி மகிழ்ச்சியாக பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யோகேசுக்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளது. தற்போது அவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் போலீஸ் வேலை கிடைத்ததில் இருந்து நந்தினியிடம் பேசுவதை யோகேஷ் தவிர்த்து வந்துள்ளார். இதனால் நந்தினி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் யோகேசை சந்தித்த நந்தினி, தன்னுடன் பேச மறுப்பது குறித்து கேட்டுள்ளார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் நந்தினியை திருமணம் செய்ய யோகேஷ் மறுத்துவிட்டார்.

தனக்கு போலீஸ் வேலை கிடைத்திருப்பதால், தனக்கு உரிய வரதட்சணையை உன்னால் கொடுக்க முடியாது என்று கூறி நந்தினியை திருமணம் செய்ய யோகேஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுத்துப்போன நந்தினி யாருடனும் பேசாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு நந்தினி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் எலந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் வேலை கிடைத்துவிட்டதை காரணம் காட்டி காதலன் தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் மனமுடைந்து நந்தினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.