தேர்தல் ஆணையம் 6 வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும்: பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் தேதி - கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


தேர்தல் ஆணையம் 6 வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும்: பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் தேதி - கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 5 Dec 2020 5:15 AM IST (Updated: 5 Dec 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

வார்டு இட ஒதுக்கீடு வெளியான 6 வாரத்திற்குள் பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, 

198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சி மன்றத்தின் பதவி காலம் கடந்த ஆகஸ்டு மாதத்துடன் நிறைவடைந்தது.

குறித்த காலத்தில் தேர்தல் நடத்தப்படாத காரணத்தால், மாநகராட்சியை நிர்வகிக்க நிர்வாக அதிகாரியை கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டது. மேலும் வார்டுகளின் எண்ணிக்கையை 243 ஆக உயர்த்த அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. அதன்படி வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சிவராஜ் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், பெங்களூரு மாநகராட்சிக்கு உடனே தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு கோரியிருந்தார். மேலும், மாநில தேர்தல் ஆணையமும், ஒரு மனுவை தாக்கல் செய்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியது. இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, நீதிபதி விஸ்வஜித்ஷெட்டி ஆகியோர் அடங்கிய தலைமை அமர்வில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் அரசு வக்கீல், மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு இருப்பதால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வார்டு மறுவரையறை பணிகள் முடிவடைந்தவுடன் 243 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தலை நடத்த ஆணையம் தயாராக இருப்பதாகவும், இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வாதிட்டார். மனுதாரர் சிவராஜ் சார்பில் ஆஜரான வக்கீல், பெங்களூரு மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அரசு செயல்பட்டுள்ளதாக கூறினார்.

இறுதி விசாரணை முடிவடைந்ததை அடுத்து முத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பை அறிவித்தது. இதில் பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீட்டு பட்டியலை ஒரு மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும், இட ஒதுக்கீட்டு பட்டியல் வெளியான நாளில் இருந்து 6 வாரத்திற்குள் 198 வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெங்களூரு மாநகராட்சிக்கு வருகிற ஜனவரி மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஐகோர்ட்டு வழங்கியுள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதில் காலதாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Next Story