கோணாவாரி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு: சாலை துண்டிப்பு; வயல்களில் மழைநீர் தேங்கியது; 1 கி. மீட்டர் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு
கோணாவாரி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலை துண்டிக்கப்பட்டது. வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் கலெக்டர் கோவிந்தராவ் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
கனமழை
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிராமப்புறங்களில் உள்ள வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேற்று 2-வது நாளாக பெய்த கன மழையால் தஞ்சையை அடுத்துள்ள பழையகல்விராயன்பேட்டையில் உள்ள கோணாவாரி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழையகல்விராயன்பேட்டை முருகன்கோவில் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நடவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள குளத்துகரை மண் சாலை வழியாகவே விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்கு சென்று வருகின்றனர். மழையால் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
மேலும் கோணாவாரி கிழக்கு வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வந்ததால் அந்த பகுதியில் உள்ள மண் சாலையில் பெரிய உடைப்பு ஏற்பட்டது. இதனால் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்து குளம் போல காட்சி அளிக்கிறது.
கலெக்டர் பார்வையிட்டார்
சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அந்த பகுதிக்கு வந்த கலெக்டர் கோவிந்தராவ் கொட்டும் மழையில் சுமார் ஒரு கி.மிட்டர் தூரம் சேறும் சகதியுமாக இருந்த மண்சாலையில் நடந்து சென்று உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். அப்போது அவர் விவசாயிகளிடம் கலெக்டர் விவரங்களை கேட்டறிந்தார். அந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு செல்லும் மண்சாலையில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கலெக்டர் கோவிந்தராவ் உடைப்பு ஏற்பட்டுள்ள மண் சாலையை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது தஞ்சை கோட்டாட்சியர் வேலுமணி, தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவையாறு
தொடர் மழை காரணமாக வெள்ளாம்பெரம்பூர் அருகே கோனகடுங்கலாறு வண்டி பாதையில் உடைப்பு ஏற்பட்டு 100 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. இந்த பகுதியை பார்வையிட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடர்ந்து நாகத்தி வெட்டாற்றை பார்வையிட்டார். அப்போது அவர் வெள்ளாம்பெரம்பூர் கோனகடுங்கலாறு உழவர்கள் வண்டிக்காக பயன்படுத்திய பாதை உடைப்பை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் குழிமாத்தூரில் ஆகாயதாமரை, அள்ளிக்கொடியை அகற்ற உத்தரவிட்டார். சுடுகாட்டு பாதை பாலத்தில் ஆகாயதாமரை, அள்ளிக்கொடி அடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேறாமல் தேங்கி இருந்ததை பார்வையிட்டு ஆகாயத்தாமரைகளை அகற்ற உத்தரவிட்டார்.
தொடர்ந்து நாகத்தி, ஆற்காடு, வெள்ளாம்பெரம்பூர், குழிமாத்தூர், கடம்மங்குடி, அந்தளி, அம்பதுமேல்நகரம் உள்பட மழையால் பாதிக்கப்பட்ட 20 கிராமங்களை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story