3-வது நாளாக கொட்டி தீர்த்த கன மழை; வெள்ளக்காடாக மாறிய நாகை மாவட்டம்; தோப்புத்துறையில் கோவில் இடிந்து விழுந்தது


நாகூர் எம்.ஜி.ஆர். நகரில் தேங்கிய மழைநீரில் பொதுமக்கள் நடந்து வந்த போது எடுத்த படம்
x
நாகூர் எம்.ஜி.ஆர். நகரில் தேங்கிய மழைநீரில் பொதுமக்கள் நடந்து வந்த போது எடுத்த படம்
தினத்தந்தி 4 Dec 2020 11:00 PM GMT (Updated: 4 Dec 2020 11:00 PM GMT)

3-வது நாளாக கொட்டி தீர்த்த கன மழையால் நாகை மாவட்டம் வெள்ளக்காடாக மாறியது. தோப்புத்துறையில் கோவில் இடிந்து விழுந்தது.

விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை
தென்கிழக்கு வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ‘புரெவி’ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, நேற்று ராமநாதபுரம் அருகே மையம் கொண்டு அதே இடத்தில் நீடித்தது. புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விடிய, விடிய கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. நாகை புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தத்தளித்தபடி சென்றனர். நாகை சிவசக்தி நகரில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

நாகை மாவட்டத்தில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 37 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 538 ஏக்கரில் தாளடி சாகுபடியும் என மொத்தம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 184 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

கடல் நீர் புகுந்தது
நாகையில் நேற்றும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நாகை நம்பியார் நகரில் கடல் நீர் புகுந்தது. இதனை பொக்லின் எந்திரம் மூலம் வெளியேற்றினர். மேலும் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வாளியில் எடுத்து வந்து வெளியே ஊற்றினர். அதுபோல நாகை நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழை காரணமாக நாகை மாவட்டம் வெள்ளக்காடு போல் காட்சி அளித்தது. கடல் சீற்றம் காரணமாக நாகை மீனவர்கள் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்றிலும், கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சுவர் உள்வாங்கியது
நாகையை அடுத்த நாகூரில் தர்காவிற்கு சொந்தமான தர்கா குளத்தின் தென்கரை பகுதியில் உள்ள சாக்கடையின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் தர்கா குளத்தின் சுவர் ஒரு பக்கமாக உள்வாங்கி இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தர்கா மேலாளர் ஜாபர் உசேன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு நாகை நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் ஆணையர் ஏகராஜ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு தர்கா குளம் சுவர் அருகே சாக்கடையில் உள்ள கழிவுகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றிட உத்தரவிட்டார். தர்கா குளம் சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதே போல் தொடர் மழையால் வண்ணாகுளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி சாலையில் ஓடி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. நாகூர் புது சாலை தெருவில் உள்ள காலனியில் மழை நீர் சூழ்ந்தது.

கோவில் இடிந்து விழுந்தது
கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது நேற்று காலை முதல் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கின. 

சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கீழ்வேளூர் பேரூராட்சி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அந்த பகுதியில் வசித்த 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக கீழ்வேளூர் அரசு மேல்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மதிவாணன் எம்.எல்.ஏ., நாகை வேளாண் விற்பனை குழு உறுப்பினர் முரளி, தாசில்தார் கார்த்திகேயன், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் வடமறைக்காடர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனியாக அம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் வேதாரண்யத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழையால் வடமறைக்காடர் கோவிலில் உள்ள அம்மன் கோவில் இடிந்து விழுந்து தரை மட்டமானது. இதுகுறித்து தகவல் அறிந்த பக்தர்கள் அங்கு வந்து இடிபாடுகளில் இருந்து அம்மன் விக்ரகத்தை மீட்டு சாமி சன்னதியில் வைத்துள்ளனர்.

வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு கிராமம் கோவில்பத்து பகுதியில் பெருமாள் கோவில் தெருவில் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது சுப்பிரமணியன் வீட்டின் வெளியே வராண்டாவில் படுத்து இருந்ததால் அவர் உயிர் தப்பினார்.

வாய்மேடு
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் சின்ன தேவன் காடு பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், ராஜு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பொக்லின் எந்திரன் மூலம் வாடிகால் வாய்க்காலை சரி செய்து மழை நீரை வெளியேற்றினர்.

Next Story