திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது; ஏராளமான வீடுகள் இடிந்து சேதம்


திருத்துறைப்பூண்டி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மதுக்கடையை மழை நீர் சூழ்ந்துள்ள காட்சி
x
திருத்துறைப்பூண்டி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மதுக்கடையை மழை நீர் சூழ்ந்துள்ள காட்சி
தினத்தந்தி 5 Dec 2020 5:49 AM IST (Updated: 5 Dec 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது.

கொரடாச்சேரி
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி, கோட்டூர், வலங்கைமான் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்தது.

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெய்த கனமழையால் அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. கொரடாச்சேரி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 1000 ஏக்கர் இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழைவிட்டு தண்ணீர் வடிந்தபிறகே நெற்பயிரின் பாதிப்புகளை கணக்கிட முடியும். வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிகட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

வலங்கைமான்
வலங்கைமான் பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வலங்கைமானை அடுத்த நார்தாங்குடி பகுதியில் 3 குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. ஆதிச்சமங்கலம் பகுதியில் இயற்கை வேளாண்மையின் கீழ் சாகுபடி செய்யப்பட்ட முன்பட்ட சம்பா பயிர்கள் கதிர் வரும் சூழ்நிலையில் இருந்தது. தொடர் மழையின் காரணமாக பயிர்கள் சாய்ந்து மகசூல் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்தபகுதிகளில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், உச்சுவாடி கிராமத்திற்கு வெண்ணாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட நடைபாலத்தின் முகப்பில் மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டு அபாய நிலையில் பாலம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார்குடி, கோட்டூர்
தொடர் மழையால் மன்னார்குடி, உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை, துளசேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் பலநூறு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்று நீர் வடிந்தால் மட்டுமே நெல் பயிரை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.கோட்டூர் பகுதியில் பெய்த மழையால் அக்கரை கோட்டகம் ஊராட்சி கரம்பக்குடி கீழ சாலை பொண்ணுக்குமுண்டான் ஆற்றின் கீழ்கரையில் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த கரையில் உடைப்பு ஏற்பட்டால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனை அறிந்த அக்கரைக்கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவி முத்துச்செல்வி வேல்முருகன், பணி ஆய்வாளர் தங்கதுரை, பாசன உதவியாளர் சிங்காரவேல், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த முருகேசன் ஆகியோர் உடைப்பு ஏற்படும் நிலையில் இருந்த கரையில் மண்மூட்டைகளை அடுக்கிவைத்து சீரமைத்தனர். கோட்டூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கோட்டூர் அருகே புழுதுகுடி ஊராட்சியில் கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பகுதியில் பெய்த கனமழையால் கோரையாறு, மரைக்காகோரையாறு, பாமணியாறு ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட இளம்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி சாய்ந்தன. மழையில் மூழ்கிய பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி பகுதியில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருத்துறைப்பூண்டி நரிக்குறவர் காலனி வீரன் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மீனாட்சி வாய்க்கால் தெரு, பள்ளிவாசல் தெரு, வாணக்காரத்தெரு, பெரியநாயகிபுரம், சின்னதம்பி, அரியலூர், அபிஷேக கட்டளை தெரு, நாடார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே செல்லமுடியாமலும், வீட்டின் உள்ளே இருக்கமுடியாமலும் சிரமப்பட்டனர். திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மதுக்கடையை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மது வாங்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தமிழ்ச்செல்வம், வாசுதேவன், தாசில்தார் ஜெகதீசன், திருவாரூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்மழையால் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Next Story