திருவாரூரில் 3-வது நாளாக விடிய, விடிய கனமழை; 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின; விவசாயிகள் கவலை


திருவாரூர் பழைய பஸ்நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை கடந்து செல்லும் வாகனங்களை படத்தில் காணலாம்
x
திருவாரூர் பழைய பஸ்நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை கடந்து செல்லும் வாகனங்களை படத்தில் காணலாம்
தினத்தந்தி 5 Dec 2020 6:01 AM IST (Updated: 5 Dec 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் 3-வது நாளாக விடிய, விடிய கனமழை பெய்தது. இதில் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பயிர்கள் அழுகும் நிலை
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரம் 550 ஏக்கர் பரப்பில் நடவும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 728 ஏக்கர் பரப்பில் நேரடி விதைப்பும் என 2 லட்சத்து 74 ஆயிரத்து 278 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 96 ஆயிரத்து 912 ஏக்கர் பரப்பளவில் நடவு முறையில் தாளடி சாகுபடி என மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பளவில் இலக்கை தாண்டி சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் புரெவி புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று 3-வது நாளாக திருவாரூரில் விடிய, விடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் வடிகால் தூர்வாராததால் வயல்களில் தேங்கிய மழை நீரில் பயிர்கள் மூழ்கின.

திருவாரூர் அருகே கீழகூத்தங்குடி, மேலகூத்தங்குடி, புலிவலம், மாங்குடி, உமாமகேஸ்வரபுரம், பழவனக்குடி, இலவங்கார்குடி ஆகிய பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் நீரில் மூழ்கின. ஆறுகள், வடிகாலில் தண்ணீர் அதிக அளவு செல்வதால் வயல்களில் தேங்கிய நீர் வடிய வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் மூழ்கிய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக அளவில் தண்ணீர் திறப்பு
தஞ்சை, நீடாமங்கலம், கொரடாச்சேரி பகுதிகளில் கனமழை பெய்வதால் கடைமடை பகுதியாக உள்ள திருவாரூர் பகுதி ஆறுகளில் தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெட்டாறு, பாண்டவையாறு, ஒடம்போக்கி, வாளவாய்க்கால் போன்ற ஆறுகளில் தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டு கரைபுரண்டு ஒடுகிறது. இதனால் வாய்க்கால், வடிகால்களில் முழுமையாக தண்ணீர் செல்கிறது. குறிப்பாக திருவாரூர் அருகே கூத்தங்குடி, கூடுர், மாங்குடி பகுதிகள் பாண்டவையாறு மூலம் பாசனம் பெற்று வருகிறது. இந்த பகுதியில் அதிக மழை பெய்தால் வயல்களில் தண்ணீர் வடிவதற்கு கூடூர் காட்டாறு வடிகாலாக இருந்து வருகிறது. மேலும் இந்த ஆற்றின் மூலம் ஒரு சில பகுதிக்கு பாசனம் பெற்று சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது காட்டாற்றில் தண்ணீர் கட்டு அடங்காமல் கரை உடையும் அளவு சென்று வருகிறது.

விவசாயிகள் கவலை
இதனால் சம்பா, தாளடி வயல்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பு இல்லாமல் வடிகால்களில் தண்ணீர் செல்கிறது. இதனால் 500 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கின. இதேபோல் பழவனக்குடி பகுதியிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. இதையடுத்து திருவாரூர் வேளாண் உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா மழை நீரில் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வயல்களில் தேங்கிய நீரை வடிய வைப்பதற்கு நடவடிக்கைகள், பயிர்கள் பாதுகாப்பு குறித்த வழிமுறைகள் பற்றி விவசாயிகளிடம் விளக்கி கூறினார். கனமழையின் காரணமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

4 மணிநேரம் மின்தடை
திருவாரூர் பழைய பஸ்நிலையம் பகுதியில் வடிகால் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் மழை நீர் வடிய வாய்ப்பு இன்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதில் கழிவு நீரும் கலந்து காணப்பட்டது. இதனால் நடந்து செல்பவர்கள் மிகவும் அவதியடைந்தனர். வாகன ஓட்டிகள் தண்ணீரை கடந்து செல்ல சிரமப்பட்டனர். நகர் பகுதிகள் அனைத்தும் உரிய வடிகால் வசதியின்றி வெள்ள காடாக காட்சியளித்தது.

இந்தநிலையில் திருவாரூர் நாலுகால் மண்டபம் துணை மின்நிலையம் அருகில் உள்ள ஒரு தென்னைமரம் திடீரென சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின்கம்பம் சேதமடைந்து மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சங்கரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் மின்ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தி மின்பாதை சீரமைக்கப்பட்டு மின் வினியோகம் வழங்கப்பட்டது. இதனால் திருவாரூர் நகர் பகுதியில் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

மழை அளவு
திருவாரூர் மாவட்டத்தில் மழை நிலவரம்:-
நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருத்துறைப்பூண்டி-220, குடவாசல்-210, நன்னிலம்-139, வலங்கைமான்-132, பாண்டவையாறு தலைப்பு-116, திருவாரூர்-110, மன்னார்குடி-105, நீடாமங்கலம்-96, முத்துப்பேட்டை-63.

Next Story