சேலம் மாவட்டத்தில் தொடர் மழை: ஏற்காட்டில் 20 இடங்களில் மரங்கள் விழுந்தன; போக்குவரத்து துண்டிப்பு


ஏற்காடு நாகலூர் சாலையில் மரம் விழுந்து கிடந்ததையும், டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்துள்ளதையும் படத்தில் காணலாம்
x
ஏற்காடு நாகலூர் சாலையில் மரம் விழுந்து கிடந்ததையும், டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்துள்ளதையும் படத்தில் காணலாம்
தினத்தந்தி 5 Dec 2020 6:10 AM IST (Updated: 5 Dec 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் ஏற்காட்டில் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 20 இடங்களில் மரங்கள் ரோட்டின் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சாரல் மழை
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சாரல் மழை தொடர்ந்து பெய்தது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 

நேற்று முன்தினம் முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த சாரல் மழை நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மழையாக பொழிந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் பலத்த காற்று வீசியதால், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் ரோட்டின் குறுக்கே விழுந்தன. இதுமட்டுமின்றி மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் மின் தடை ஏற்பட்டதால் துண்டிக்கப்பட்டு ஏற்காடு பகுதி இருளில் மூழ்கியது.

போக்குவரத்து துண்டிப்பு
ரோட்டின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் கிராமப்புறங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குறிப்பாக நாகலூர் சாலை, பக்கோடா பாயிண்ட் சாலைகளின் நடுவே மரங்கள் முறிந்து விழுந்ததால் கிராமங்கல் இருந்து மக்கள் டவுனுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கு சிரமப்பட்டனர். மரம் விழுந்ததில் நாகலூர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சேலம் மாநகரில் நேற்று 2-வது நாளாக சாரல் மழை பெய்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், பெரமனூர், கன்னங்குறிச்சி, அழகாபுரம், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, அன்னதானபட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். வேலைக்கு சென்ற அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும், பல்வேறு தேவைளுக்காக வெளியில் சென்ற பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்தனர். ஆனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் காலை முதல் இரவு வரையிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த சாரல் மழை மற்றும் காற்றின் காரணமாக பெத்தநாயக்கன்பாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, அபிநவம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழை அளவு
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வீரகனூர்-63, கெங்கவல்லி-55, தம்மம்பட்டி-40, ஏற்காடு-35.4, ஆத்தூர்-34.3, காடையாம்பட்டி-31, பெத்தநாயக்கன்பாளையம்-30, ஆனைமடுவு-27, சேலம்-10.5, எடப்பாடி-7, சங்ககிரி-6.2.

Next Story