மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்: தி.மு.க. எம்.பி.யுடன் காரசார விவாதம்; அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
தர்மபுரி மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில் திட்டங்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.யுடன் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கண்காணிப்புக்குழு கூட்டம்
தர்மபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் அதன் தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான செந்தில்குமார் தலைமையில் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), சம்பத்குமார் (அரூர்), தடங்கம் சுப்பிரமணி (தர்மபுரி), உதவி கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய திட்டங்கள் தொடர்பான பட்டியலை விரைவில் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும் என்றார்.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
கூட்டத்தில் கண்காணிப்புக்குழு தலைவர் செந்தில்குமார் எம்.பி. பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மத்திய அரசின் நிதி மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு தேவையான கையுறைகளை போதிய அளவில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தொடங்கி வைத்த திட்டப்பணிகளை எம்.பி. மீண்டும் பூமி பூஜை செய்து தொடங்கி வைப்பது ஏன்? இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மிரட்டல் விடுப்பது ஏன்? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இங்கு நடக்கும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அவருக்கு சரியான விவரங்கள் தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
காரசார விவாதம்
செந்தில்குமார் எம்.பி. பேசுகையில், மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளின் தொடக்க விழாவில் பின்பற்ற வேண்டிய அரசு விதிமுறைகள் குறித்து தெரியாமல் பேசக்கூடாது. இங்கு அரசியல் பேச வேண்டாம். இதற்கு நான் பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார். இதுதொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ. இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story