ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்திற்கு ரூ.2½ கோடியில் புதிய தார்சாலை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்திற்கு ரூ.2½ கோடியில் புதிய தார்சாலை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
தார் சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் நாரலப்பள்ளி ஊராட்சி கடைக்கோடி மலைக்கிராமமான ஏக்கல் நத்தம் கிராமத்திற்கு கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வனத்துறை பொறியாளர் பாஸ்கர், வனச்சரக அலுவலர்கள் சக்திவேல், முருகேசன், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஷ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி உமாபதி, வனவர்கள் ரவிசந்திரன், சம்பத்குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி ஒன்றியம் நாரலப்பள்ளி ஊராட்சி மலைக்கிராமமான ஏக்கல்நத்தம் கிராமமக்களின் சாலை வசதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.2½ கோடி மதிப்பில் கலெக்டரின் விருப்ப நிதி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி நிதியில் இருந்து தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறைகள் கேட்பு
இந்த தார்சாலை பைரேகவுண்டனூர் முதல் ஏக்கல் நத்தம் வரை சுமார் 4.25 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. தற்போது 2 அடுக்கு ஜல்லிகள் அமைக்கப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. சாலைகளில் மலையேற்ற பகுதிகளில் மழைநீர் சாலைகளை அரிக்காத வண்ணம் 254 மீட்டர் தூரத்திற்கு சிமெண்டு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 இடங்களில் மழைநீர் செல்லும் பாதையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் இருளர் இன காலனியை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் பொதுமக்களிடம் பேசுகையில், ஏற்கனவே 11 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியை சேர்ந்த 6 இருளர் இன மக்களுக்கு பசுமை வீடு ஒதுக்க பெற்றுள்ளது. பசுமை வீடு கட்ட அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலை பணிகள் முடிவுற்ற பின்னர் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இங்குள்ள குடிநீர் திறந்தவெளி கிணறு ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story