நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கே வழங்கப்படுகிறது; கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
நம்பியூரில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசாரத்தில் தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் அனைத்து திட்ட பணிகளுக்கும் அடிக்கல் மட்டுமே நடப்படுகிறது. எந்த திட்டத்தையும் செய்து முடிக்கவில்லை. நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் அனைத்தும் முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் ஸ்டாலின். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆட்சி வரவேண்டும். தமிழ் மொழியை பாதுகாக்கும் ஆட்சி வரவேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நம்பியூர் ஒன்றிய பொறுப்பாளர் மெடிக்கல் செந்தில்குமார், பேரூர் செயலாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொங்கர் பாளையத்தில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசும்போது, ‘இன்னும் 5 மாதத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும். மத்திய அரசு விவசாய சட்ட மசோதாக்களை வைத்து விவசாயிகளின் வாழ்க்கையை நசுக்குகிறது. அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது கருணாநிதி ஆட்சியில் தான்.
சாதி ஒழிப்பை கொள்கையாக கொண்ட கட்சி தி.மு.க. தான்’ என்றார். பின்னர் அவருக்கு டி.என்.பாளையம் ஒன்றியம் சார்பில் வீர வாள் வழங்கப்பட்டது. மேலும் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு மிக்சி வழங்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியம், ஒன்றிய பொறுப்பாளர் சிவபாலன், ஊராட்சி பொறுப்பாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story