சிவகாசி அருகே வடமாநில தொழிலாளர்கள் 30 பேர் மீட்பு; சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
சிவகாசி அருகே வடமாநில தொழிலாளர்கள் 30 பேரை அதிகாரிகள் மீட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொழிற்சாலைகள்
தொழில் நகரமான சிவகாசியில் ஏராளமான பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம், காகித மில்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலாளர்கள் இங்கு இல்லை என்பதால் வெளிமாநிலங்களில் இருந்து ஏஜெண்டுகள் மூலம் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.
இவர்களுக்கு குறைந்த கூலி வழங்கப்படுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே புகார்கள் எழுந்தன. ஆனாலும் தொடர்ந்து வெளி மாநில தொழிலாளர் சிவகாசி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆர்வமுடன் வருகிறார்கள். சிவகாசி பகுதியில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பல்வேறு பகுதியில் பணியாற்றி வருவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
தொழிலாளர்கள்
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் காகித ஆலைகள், பட்டாசு ஆலைகள் அதிகளவில் உள்ளன. இந்த ஆலைகளில் பணியாற்ற பீகார் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பீகாரை சேர்ந்த சுனில்குமார் யாதவ் (வயது 30) என்பவர் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களுக்கு தங்க இடம் கொடுத்து சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் ஏஜெண்ட் சுனில்குமார் தான் கூறியபடி உரிய சம்பளத்தை அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வாட்ஸ்-அப்பில் புகார்
இந்தநிலையில் பீகாரை சேர்ந்த 30 தொழிலாளர்கள் தாங்கள் சிவகாசி அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டதாக தங்கள் உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து அனுப்பி உள்ளனர்.
இந்த வாட்ஸ்-அப் வீடியோ பீகார் முழுவதும் காட்டுத்தீயாக பரவியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தங்கள் பகுதி தொழிலாளர்கள் விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக தொண்டு நிறுவன நிர்வாகி முனியராஜியிடம் புகார் தெரிவித்தார். அவர் அந்த தகவலை மாவட்ட சட்ட பணி ஆணையக்குழு செயலாளர் மாரியப்பனிடம் தெரிவித்துள்ளார்.
30 பேர் மீட்பு
இந்தநிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சிவகாசி பகுதியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த தகவலை மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாராதா கவனத்துக்கு, மாரியப்பன் கொண்டு சென்று அவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ் குமார், சிவகாசி மாஜிஸ்திரேட்டுகள் கல்யாணமாரிமுத்து, சந்தன குமார், தாசில்தார் வெங்கடேசன், திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராஜா, மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் பிரிவு அதிகாரிகள் ராஜேஸ்வரி, பாக்கியலட்சுமி மற்றும் பலர் எம்.புதுப்பட்டி, காளையார்குறிச்சி, சுக்கிரவார்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தஆய்வில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். அவர்களை அடைத்து வைத்திருந்த ஏஜெண்ட் சுனில்குமார் யாதவை பிடித்து விசாரித்தனர்.
சொந்த ஊருக்கு
மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் சப்-கலெக்டர் தினேஷ்குமார் பேசினார். அப்போது அவர்கள் தங்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், போதிய உணவு, தங்கும் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும், தங்களை அழைத்து வந்த சுனில்குமார்யாதவ் உரிய சம்பளத்தை வழங்க மறுப்பதாக தெரிவித்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வதாக கூறினர்.
இதைதொடர்ந்து மீட்கப்பட்ட 30 தொழிலாளர்களும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் சிலர் இருந்தனர்.
Related Tags :
Next Story