இளையான்குடி அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
இளையான்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள மெய்யனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன்கள் சாய்ராம்(வயது 18), சாய் லட்சுமணன்(18). இரட்டையர்கள். இவர்கள் இருவரும் அதே ஊரில் ஒலிப்பெருக்கி வைத்து நடத்தும் ஜாகிர்உசேன்(57) என்பவரிடம் வேலை பார்த்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கீர்ராவுத்தர் தெருவில் வசிக்கும் இஸ்மாயில் என்பவரது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. இது பற்றி அறிந்த சாய்லட்சுமணன் மின்சாரத்தை சரி செய்வதற்காக அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறினார்.
அப்போது லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மின்கம்பம் ஈரத்தன்மையுடன் காணப்பட்டது. மின்கம்பத்தில் ஏறிய சாய் லட்சுமணன் மின்பழுதை சரி செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அவர் மீது பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சாய்ராம் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story