‘புரெவி’ புயலால் மாவட்டத்தில் 31 முகாம்களில் 1,343 பேர் தங்க வைப்பு - மழைக்கு 118 வீடுகள் சேதம்; 12 கால்நடைகள் சாவு
‘புரெவி‘ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 நிவாரண முகாம்களில் 1, 343 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழையினால் 118 வீடுகள் சேதமடைந்துள்ளன. 12 கால்நடைகள் செத்தன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ‘கஜா’ புயலால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர். அதில் இருந்து மீண்டு வருகிற நிலையில் கடந்த நவம்பர் மாதம் ‘நிவர்’ புயல் கரையை கடப்பதாக இருந்தது. இதற்காக மாவட்டத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் ‘நிவர்’புயல் புதுச்சேரியில் கரையை கடந்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிப்பு இல்லாமல் போனது. மழையும் அதிகமாக பெய்யவில்லை. இந்த நிலையில் வங்க கடலில் உருவான ‘புரெவி‘ புயலால் புதுக்கோட் டை மாவட்ட மக்களிடையே மேலும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. ‘புரெவி‘ புயலும் வலுவிழந்ததால் மழை அதிகமாக பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. நேற்று தொடர்ந்து மழை தூறியப்படி காணப்பட்டது.
மாவட்டத்தில் ‘புரெவி‘ புயல் முன்னெச்சரிக்கையாக ஆங்காங்க நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தாழ்வான இடங்களில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, திருமயம், பொன்னமராவதி ஆகிய இடங்களில் என மொத்தம் 31 நிவாரண முகாம்களில் ஆண்கள் 433 பேர், பெண்கள் 559 பேர், சிறியவர்கள் 351 பேர் என மொத்தம் 1, 343 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில் குடிசைகள், ஓடு வீடுகள், கட்டிட சுவர்கள் என மொத்தம் 118 வீடுகள் சேதமடைந்தன.
பசு மாடுகள், கன்றுக்குட்டி, ஆடுகள் என மொத்தம் 12 கால்நடைகள் உயிரிழந்தன. மழையினால் சேதமடைந்தவை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இதனால் நேற்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ரெங்கசாமி (வயது 65) என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது ரெங்கசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் மற்றொரு பகுதியில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விராலிமலை பொய்யமணி சீத்தப் பட்டியைச் சேர்ந்தவர் ஆரி. கூலி தொழிலாளியான இவரது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மீது சுவர் இடிந்து விழுந்ததில் சேதம் அடைந்தது.
இதனையடுத்து ஆரி குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நிவாரண பொருட் கள் வழங்கப்பட்டன.
ஆதனக்கோட்டை முருகன்கோவில் தெருவை சேர்ந்த முருகேசன், கணேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது குடிசை வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதேபோன்று பெருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளவெட்டான்விடுதி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் மாரியப்பனின் ஓட்டு வீடும், பெருமாளின் கூரைவீடும் பெருங்களூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசித்துவரும் சைதம்மாள், சாமியம்மாளின் குடிசை வீடுகளும் இடிந்து விழுந்தன.
Related Tags :
Next Story