ஆரணி அருகே, கால்வாயில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி சாவு


ஆரணி அருகே, கால்வாயில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 5 Dec 2020 7:30 PM IST (Updated: 5 Dec 2020 7:17 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே கால்வாயில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆரணி,

ஆரணியை அடுத்த குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர், செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகுமார், உன்னிகிருஷ்ணன், சென்னகிருஷ்ணன் (வயது 8) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சகோதரர்கள் 3 பேரும் நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள கமண்டல நாக நதி ஆற்றில் இருந்து சேவூர் ஏரிக்கு செல்லக்கூடிய பாசன கால்வாயில் குளிக்க சென்றனர்.

அப்போது சென்னகிருஷ்ணன் திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தான். இதனை பார்த்த அவனது அண்ணன்கள் கிருஷ்ணகுமார், உன்னிகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கால்வாயில் குதித்து தேடிப்பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் சென்னகிருஷ்ணன் கிடைக்காததால் உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஆரணி தீயணைப்பு நிலைய அதிகாரி அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படைவீரர்கள் சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி சென்னகிருஷ்ணனின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story