3 நாட்களாக பரிதவித்த குட்டி யானை தாயுடன் சேர்ப்பு மைசூரு அருகே உருக்கமான சம்பவம்
3 நாட்களாக தாயை பிரிந்து பரிதவித்த குட்டி யானை, அதன் தாயுடன் சேர்க்கப்பட்டது. மைசூரு அருகே இந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு,
மைசூரு மாவட்டத்தில், அனகோடு கிராமம் உள்ளது. இந்த கிராமம் நாகரஒலே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்துவிடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
அதுபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் கூட்டம் இரை தேடி அனகோடு கிராமத்திற்குள் வந்துள்ளது. இதில் பிறந்து 2 மாதமே ஆன ஒரு குட்டி யானையும் வந்தது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு விளை நிலத்தில் புகுந்து பயிர்களை தின்றன. பின்னர் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
ஆனால் யானை கூட்டத்தில் இருந்து குட்டி யானை மட்டும் வழிதவறியது. இதனால் அந்த குட்டி யானை, தாயை பிரிந்து பரிதவித்து வந்தது. இதை பார்த்த கிராம மக்கள், நாகரஒலே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்க முயன்றனர். ஆனால் தாய் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதால், அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு வீரண்ண ஒசஹள்ளி கிராமத்தில் உள்ள யானை முகாமிக்கு அழைத்து வந்தனர். அங்கு புட்டியில் பாலூட்டி குட்டி யானை பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தாய் யானை, அனகோடு கிராமத்தை ஒட்டிய பகுதியில் நடமாடியது. இதை அறிந்த வனத்துறையினர், குட்டி யானையை ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்று, தாயுடன் சேர்த்தனர். 3 நாட்களாக தாயை பிரிந்த குட்டி யானை, தாயை பார்த்ததும் மகிழ்ச்சியில் ஓடி சென்று அருகில் நின்றது. அப்போது தாய் யானை, தனது தும்பிக்கையால் குட்டியை தடவி கொடுத்து அரவணைத்து, வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றது.
இந்த காட்சி அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், உருக்கத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இரை தேடி வந்த போது குட்டி யானை வழிதவறிவிட்டது. இதனால் தாய் யானையை பிரிந்து அது பரிதவித்தது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் குட்டி யானையை தாயுடன் சேர்க்க முயன்றோம். ஆனால் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குட்டி யானையை, வீரண்ணஒசஹள்ளி முகாமில் வைத்து பராமரித்து வந்தோம். குட்டி யானை பிறந்த 2 மாதங்கள் தான் ஆகிறது. அதனால் அதற்கு பால் புகட்டினோம். தற்போது குட்டி யானையை தாயுடன் சேர்ந்துள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story