சிக்பள்ளாப்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
சிக்பள்ளாப்பூர் அருகே, அரசு பள்ளியில் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா மாஞ்சேனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கனக்கனகோபா கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 32). இவர் கடந்த 8 ஆண்டுகளாக கனக்கனகோபா கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
ஆனாலும் அவரது வேலை நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் சந்திரசேகருக்கு குறைந்த அளவே சம்பளம் கிடைத்து வந்தது. இதன்காரணமாக குடும்பத்தை நடத்த முடியாமல் சந்திரசேகர் சிரமப்பட்டு வந்து உள்ளார். மேலும் தனது வேலையை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர் தாலுகா கல்வி அதிகாரியிடம் அடிக்கடி மனு அளித்து வந்ததாகவும் தெரிகிறது. ஆனாலும் அவரது வேலை நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் சந்திரசேகர் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற சந்திரசேகர், பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த மாஞ்சேனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சந்திரசேகர் கடிதம் எதுவும் எழுதி வைத்து உள்ளாரா என்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்திரசேகர் தற்கொலை செய்த அறையில் உள்ள கரும்பலகையில் எனது சாவுக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம். மாணவர்களே உங்களது எதிர்காலத்தை பிரகாசமாக்குங்கள். எனது அன்புக்குரியவர்களே என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. அதாவது கரும்பலகையில் எழுதிவைத்து விட்டு சந்திரசேகர் தற்கொலை செய்தது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து மாஞ்சேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகிகள் சிலரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story