டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தி.மு.க. ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தி.மு.க.வினர் தமிழகமெங்கும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதேபோல் தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேளாண் சட்டத்தால் விவசாயிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கும், வேளாண் சட்டத்திற்கும் ஆதரவு அளித்து வரும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பொய் பரப்புரை
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசுகையில், “வேளாண் சட்டம் ஒப்பந்தம் போட்ட விவசாயி எந்த கம்பெனிக்கும் கொடுக்கலாம் என சொல்லிட்டு, அத்தியாவசிய விளைபொருட்கள் பட்டியலில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கியுள்ளனர். இதன்மூலமாக பொருட்களை பதுக்கும் நிலை ஏற்படும். இந்த பொருட்கள் 1969-ம் ஆண்டு முதல் அத்தியாவசிய பொருட்களாக பட்டியலில் இருந்தது. இப்போது திருத்தி அமைக்கப்பட்டு உள்ள வேளாண் சட்டத்தால் கார்ப்பரேட் கம்பெனிகளே பயனடைய முடியும். விவசாயிகள்
வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் வேளாண் திருத்தச்சட்டம் சிறப்பாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து மக்களிடம் பொய் பரப்புரை செய்து வருகின்றனர்“ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளர் ராஜ்குமார் செல்வின், முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், விவசாய அணி சுப்பிரமணியம் மற்றும் ராமர், அவைத் தலைவர் செல்வராஜ், மகளிரணி கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர் சுரேஷ்குமார் உள்பட ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தி.மு.க.வினர் கையில் ஏந்தி இருந்தனர்.
Related Tags :
Next Story