போராட்டம் நடத்தும் மின்துறை ஊழியர்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் நாராயணசாமி வேண்டுகோள்
தனியார் மயத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் மின்துறை ஊழியர்கள் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டுவந்த 3 கருப்பு சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் பிரதமர் மோடி இந்த சட்டங்கள் தேவை என்று விவசாயிகளை அவமதிக்கும் விதமாக பேசி வருகிறார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை எங்கள் அரசு ஆதரிக்கிறது. வருகிற 8-ந்தேதி நாடு முழுவதும் முழுஅடைப்பு நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். எனவே சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி இந்த சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும்.
நிவர் புயலால் புதுவையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்ய நாளை (திங்கட்கிழமை) மத்தியக்குழு வருகிறது. நிவர் புயலினால் ரூ.400 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது ஏற்பட்டுள்ள மழைசேதம் குறித்தும் மத்திய குழுவிடம் பேசுவேன்.
மின்வினியோகத்தை தனியார் மயமாக்குவது தொடர்பாக புதுவை அரசுக்கு கடிதம் வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் கடிதம் எழுதினோம். இந்த முடிவை வாபஸ் பெறக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக கடிதம் அனுப்பி உள்ளது.
போராட்டம் என்ற பெயரில் மின் வினியோகத்தை தடை செய்யக்கூடாது என்று கூறியதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் மின்துண்டிப்புகளை சரிசெய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்துறையை தனியார் மயமாக்குவதை எங்கள் அரசு எதிர்க்கிறது. நாங்களும் தொழிலாளர்கள் பக்கம் உள்ளோம். அதேநேரத்தில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம். பொதுமக்களுக்கு இடையூறின்றி போராட வேண்டும்.
புதுவை மாநில மக்களுக்கு 5 மாதத்துக்கான இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்க ரூ.79 கோடிக்கு கோப்பு அனுப்பினோம். இதற்கு தேவையான பணம் அரசிடம் உள்ளது. ஆனால் அதை ஏற்காமல் கவர்னர் கிரண்பெடி 3 மாதத்துக்கான பணம் வழங்க ரூ.54 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் சேர்ந்துவிடும். மீதமுள்ள மாதங்களுக்கான நிதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
முன்னதாக இலவச அரிசிக்கு பதில் பயனாளிகள் சிலருக்கு பணத்தை வழங்கினார். அப்போது அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story