4-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை


அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்
x
அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்
தினத்தந்தி 6 Dec 2020 6:30 AM IST (Updated: 6 Dec 2020 6:30 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தென்காசி மாவட்டத்தில் அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி
மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென்காசி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தென்காசி பழைய பஸ் நிலையம் அருகில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் சுடலை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் காத்தவராயன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.கே.கணபதி, மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் முருகன் ராஜ், செயற்குழு உறுப்பினர் கசமுத்து, மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றாலம்-செங்கோட்டை
குற்றாலம் அண்ணாசிலை அருகில் குற்றாலம் செயலாளர் கணேஷ் தாமோதரன் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செய்தனர். மாவட்ட வர்த்தக அணி செயலாளரும், சென்னை தாய்கோ வங்கி மாநில துணைத்தலைவருமான என்.சேகர், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ஏற்பாட்டில், செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பால் கூட்டுறவு சங்க தலைவா் பி.வி.நடராஜன், அ.தி.மு.க. நகர அவைத்தலைவா் தங்கவேலு, பொருளாளா் ராஜா, நகர துணை செயலாளா் பூசைராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாவூர்சத்திரம்
கீழப்பாவூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு முன்னாள் எம்.பி.யும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேரூர் செயலாளர் ஜெயராமன், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சேர்மபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம், சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில், சங்கரன்கோவில் பஸ்நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து புதுமனை தெரு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பாவூர்சத்திரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய இணை செயலாளர் கவிதா, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சரவணன், வர்த்தக அணி துணை செயலாளர் இளவரசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், கீழப்பாவூர் நகர செயலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர் நகர அ.தி.மு.க. சார்பில், பயணியர் மாளிகை முன்பு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் விஸ்வநாதபேரி பஸ் நிலையம், சிவகிரி பஸ் நிலையம் மேல்புறம் உள்ள கலையரங்கம் அருகே ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் சீமான் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு தென்காசி புறநகர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திருமலாபுரம் கிளை செயலாளர் காளிதாஸ், ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.
பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் மற்றும் செங்கோட்டை தபால் நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story