விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


தொடர்மழையினால் கீழ சத்திரம் கிராமத்தில் உள்ள ஊருணி நிரம்பி இருப்பதை படத்தில் காணலாம்
x
தொடர்மழையினால் கீழ சத்திரம் கிராமத்தில் உள்ள ஊருணி நிரம்பி இருப்பதை படத்தில் காணலாம்
தினத்தந்தி 6 Dec 2020 8:43 AM IST (Updated: 6 Dec 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜபாளையம்
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை மேக மூட்டமாக இருந்தது. பின்னர் மதியம் சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்தது. இதையடுத்து பலத்த மழையாக 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராஜபாளையத்தில் கட்டிடத்தின் அடிபகுதியில் நீர்கசிவு ஏற்பட்டு வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. கடைகளில் நீரூற்று வருவதால் வியாபாரம் செய்ய முடியாமல் 
வியாபாரிகளும் அவதிப்படுகின்றனர்.

வத்திராயிருப்பு
அதேபோல வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், கூமாப்பட்டி, சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், சுந்தரபாண்டியம் மேலக்கோபாலபுரம், வ.புதுப்பட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை தொடங்கியது.

இந்த சாரல் மழையானது நேற்று அதிகாலை 4 மணி வரை பெய்தது. பின்னர் மீண்டும் நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய சாரல் மழை மதியம் 1 மணி வரை நீடித்தது. தற்போது பெய்து வரும் சாரல் மழையால் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தாயில்பட்டி
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான விஜய கரிசல்குளம், வன மூர்த்தி லிங்கபுரம், மடத்துப்பட்டி, சங்கரபாண்டியபுரம், குகன்பாறை, வல்லம்பட்டி, கோட்டப்பட்டி, பேர நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டு வருகிறது. ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்மழையினால் கீழ சத்திரம் கிராமத்தில் உள்ள ஊருணி நிரம்பியது. வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த விளாமரத்துபட்டியில் காளியம்மன் கோவில் தெருவில் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதியில் இருந்த 20 குடும்பத்தை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டனர்.

மழை அளவு
விருதுநகர் மாவட்டத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரித்த அளவிற்கு புயல் பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில் மாவட்டம் முழுவதும் 3-வது நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- அருப்புக்கோட்டை 28, சாத்தூர் 3, ஸ்ரீவில்லிபுத்தூர் 26, சிவகாசி 12, விருதுநகர் 20, திருச்சுழி 11.5, ராஜபாளையம் 32, காரியாபட்டி 14.4, பிளவக்கல் 2, வெம்பக்கோட்டை 8, கோவிலாங்குளம் 5.8. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 139.3 மில்லி மீட்டர். சராசரி மழை அளவு 11.6 மில்லி மீட்டர். நீர்நிலைகளில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நீர்வரத்து இல்லை.

Next Story