தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது: வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு


தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது: வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு
x
தினத்தந்தி 6 Dec 2020 9:55 AM IST (Updated: 6 Dec 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையின் காரணமாக வீடூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது வீடூர் அணை. 32 அடி கொள்ளளவு கொண்ட அணையின் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் நிலங்கள் என்று மொத்தம் 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நவம்பர் மாத தொடக்கத்தில் அணையில் 10 அடியில் தண்ணீர் இருந்தது. தொடர்ந்து நிவர் புயலால் கிடைத்த மழையின் காரணமாக, அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. கடந்த 26-ந் தேதி நீர்மட்டம் 19 அடியாக இருந்தது.

முழு கொள்ளளவை எட்டியது

இதை தொடர்ந்து தற்போது புரெவி புயல் காரணமாக, பெய்து வரும் தொடர் மழையால், அணைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் தொண்டியாறு, வராகநதி வழியாக அணைக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் அணையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அதிகாலையில், அணையில் உள்ள 9 மதகுகளில் 3 மதகுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் வந்த நிலையில் 405 கனஅடி அளவிற்கு உபரிநீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றினர். மதியம் 12 மணிக்கு நீர் வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து அணைக்கு வந்த நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ள அபாய எச்சரிக்கை

ஆற்றின் கரையோர பகுதிகளான வீடூர், அங்கிணிக்குப்பம், கணபதிப்பட்டு, விநாயகபுரம், ரெட்டிக்குப்பம், கயத்தூர், இளையாண்டிப்பட்டு, எம்.குச்சிப்பாளையம், இடையப்பட்டு, ஆண்டிப்பாளையம், பொம்பூர், திருவக்கரை ஆகிய 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழையினால் வீடூர் அணை நிரம்பி உள்ளதால் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர்கள் அணைக்கு வந்து வேடிக்கை பார்த்து வருகிறார்கள். முன்னெச்சரிக்கையாக அங்கு பாதுகாப்புக்காக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தரைப்பாலம் மூழ்கியது

அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் கீழ்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அணை பகுதியில் இருந்து மேம்பாலம் வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். அதேபோல் வீடூர் அணையை கடந்து பொம்பூர் வழியாக சிறுவை கிராமத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள், நேற்று வீடூர் அணை வரை மட்டுமே இயக்கப்பட்டது.

இந்நிலையில் போலீஸ் ஐ.ஜி. சாரங்கன், டி.ஐ.ஜி. எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வீடூர் அணைக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டறிந்தனர்.

Next Story