மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை தி.மு.க. எதிர்க்கிறது - பொதுச்செயலாளர் துரைமுருகன் பேச்சு
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை தி.மு.க. எதிர்க்கிறது என்று ராணிப்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
தி.மு.க. தலைமை போராட்டம் அறிவித்த இரண்டு நாட்களிலேயே, மாநாடு போல் கூட்டத்தைக் கூட்டி ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் காந்தி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். 1967-ம் ஆண்டுக்கு முன்பு இப்படித்தான் தி.மு.க.வுக்கு எழுச்சி இருந்தது. அது, இப்போது திரும்பி 2021-ம் ஆண்டு ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். 100 மைல் தூரம் நடந்து வந்து டெல்லி போராட்டத்திலே விவசாயிகள் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களிடம் இதுகுறித்து கேட்டால், சிறு விவசாயிகளை முதலாளிகளிடம் அடகு வைக்கக்கூடாது, கரும்பு உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு எடுத்து விட்டது, இதைத் தட்டிக்கேட்டு தான் விவசாயிகள் கூடி இருக்கிறோம், என்கிறார்கள்.
அவ்வாறு தங்களின் நியாயமான உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை ஆதரித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை தி.மு.க. எதிர்க்கிறது. விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற்று, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் அசோகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.கே.சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், வசந்தி, மாவட்ட பொருளாளர் கண்ணையன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தி.மு.க. தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் பலர் தங்களின் கைகளில் கரும்பை ஏந்தியவாறு இருந்தனர். மேலும் விவசாயிகள் பலர் டிராக்டர்களில் வந்தனர். ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முடிவில் நகர பொறுப்பாளர் பூங்காவனம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story