மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும் - சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.பி. கிரிக்கெட் மைதானத்தில் நேற்று காலை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு கொடிகளுடன் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பச்சை துண்டு அணிந்தும், கையில் கருப்பு கொடியை ஏந்தியும் கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களுக்கு வலு சேர்க்கிற வகையிலும் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஆனால் சேலத்தில் முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால் தி.மு.க. போராட்டத்தை முடக்க, திட்டமிட்டு முயற்சிகளை செய்துள்ளனர். ஆளுங்கட்சி அ.தி.மு.க. தன்னுடைய அதிகாரத்தால் காவல்துறை மூலம் ஆங்காங்கே இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினரை கலந்து கொள்ள விடாமல் தடுத்து கைது செய்திருக்கிறார்கள். சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடாது.
சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் பேரை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இது எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமாக இருக்கலாம். ஆனால் எங்கள் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த மண் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த போராட்டத்திற்கு புறப்படும் முன்பு வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி மரியாதை செலுத்திவிட்டு தான் இந்த மேடைக்கு வந்து இருக்கிறேன்.
இந்த போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக அல்ல. எங்களுடைய சொந்த பிரச்சினைக்காக அல்ல. தி.மு.க.வின் வளர்ச்சிக்காக நடத்துகிற போராட்டம் இது அல்ல. நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்களுக்காக தி.மு.க. நடத்தும் போராட்டம் என்பதை ஆளுங்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. நடத்தும் போராட்டத்தை முடக்கும் முயற்சிகள் பலிக்காது. எந்த அடக்குமுறைக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். நாம் எழுப்பக்கூடிய இந்த குரல் டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக ஒலித்தாக வேண்டும். மண்ணையும், மக்களையும் காக்கக்கூடிய பணியை தி.மு.க. என்றைக்கும் நடத்தும், அதற்கு போராடுபவர்களுக்கு தி.மு.க. துணை நிற்கும்.
விவசாயிகளையும், ஜனநாயகத்தையும் மதிக்காமல் அதிகார பலம் இருப்பதால் 3 வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி ஒருவர் ராஜினாமா செய்தபோதே மத்திய அரசு திருந்தி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா காலத்தில் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். மத்திய அரசுக்கு விவசாயிகள் 3 மாதம் அவகாசம் கொடுத்தனர். ஆனால் தற்போது டெல்லியில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். சுதந்திர இந்தியாவில் இதுபோன்று விவசாயிகள் போராடிய வரலாறு கிடையாது. அவர்களை வாழ்த்தி முதலில் நான் ‘சல்யூட்’ செய்கிறேன்.
விவசாயிகள் வீதியில் போராடும் நாளில் பிரதமர் மோடி பேசும்போது, விவசாயிகளுக்கு நன்மை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்ற உத்தரவாதத்தை ஏன் சட்டமாக கொண்டுவரவில்லை. பிரதமர் மோடி, ஆட்சிக்கு வருமுன் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவேன் என்று கூறினார். அவரது வாக்குறுதியை நம்பி விவசாயிகள் வாக்களித்தனர். அதற்கு அவர் கொடுக்கும் பரிசுதான் விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்கள். ஆனால் தற்போது வருமானமே இல்லாமல் விவசாயிகள் உள்ளனர்.
வாழும் தெய்வங்களான விவசாயிகள் வேதனை படலாமா? ஏழை தாயின் மகன் என்று கூறும் பிரதமர் மோடி, ஏழை விவசாயிகள் வீதிக்கு வந்து போராடுவதை கண்டுகொள்ளாதது ஏன்?. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்க்கின்றனர். வேளாண் திருத்த சட்டங்களில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தான் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
ஏழை தாயின் மகன் எனக்கூறும் பிரதமர் மோடி சட்டம் இயற்றினார். அதனை விவசாயி என்று தம்பட்டம் அடிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தான் நாட்டில் 95 சதவீதம் உள்ளனர். வேளாண் சட்டம் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்ற சட்டம் உள்ளது. அப்படியிருந்தும் மாநில அரசு ஆதரிப்பது ஏன்? இது குறித்து கேள்வி கேட்டால் போராட்டத்தை தூண்டிவிடுவதாக கூறி, ஊழல் குறித்து பேசுகிறார். 2ஜி ஊழல் குற்றச்சாட்டு பற்றி சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதற்கு முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா சரியான விளக்கம் அளித்துள்ளார். யார் ஊழல் புரிந்து சிறைக்கு சென்றார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டமன்றத்தை கூட்டி வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் எடப்பாடி பழனிசாமிக்கு பாவமன்னிப்பு கிடைக்கும். அதேபோல், ஏழை தாயின் மகன் என்று கூறும் மோடியும், ஜனநாயகத்தை மதித்து போராடும் விவசாயிகளை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மத்திய அரசு வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறும் வரை விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story