ஊட்டியில் தி.மு.க. கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்


ஊட்டியில் தி.மு.க. கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2020 7:15 PM IST (Updated: 6 Dec 2020 7:59 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊட்டி,

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முபாரக் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கி பேசியதாவது:-

அரசியல் சட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு என்று தனித்தனியாக பட்டியல் உள்ளது. இதில் வேளாண்மையானது மாநில அரசுக்கு சொந்தமானது ஆகும். விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு என்ன விலை கொடுக்க வேண்டும், அவர்களது பிரச்சினைகள் தீர்க்கும் வழி என்ன? என்பதை மாநில அரசு முடிவு செய்யும். இதில் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பாகிஸ்தான் போர் நடந்த சமயத்தில் ரூ.6 கோடி, கார்கில் போர் நடந்த சமயத்தில் ரூ.100 கோடி நிதி அளித்தார். இந்தியாவுக்கு ஆபத்து வரும்போது தி.மு.க. கைகொடுத்து இருக்கிறது. ஒரே நாடு ஒரே மொழி என்ற மத்திய அரசின் கொள்கையால் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் உள்ள இந்தியா சிதறி போகும். வேளாண் சட்டங்களால் அரிசி, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருக்காது. அவற்றை பெரும் முதலாளிகள் பதுக்கி வைத்து, விலை உயர்வு ஏற்படுத்த வழிவகுக்கும்.

கரும்பு, நெல் போன்றவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமல் போகும். நெல் கொள்முதல் நிலையங்கள், விற்பனை கூடங்கள், மண்டிகள் இருக்காது. பொது வினியோக திட்டம் மூலம் மாநில அரசு அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு விற்பது பாதிக்கப்படும். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் மத்திய அரசிடம் கேட்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் திராவிடமணி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story