கோவை விமான நிலையத்தில் சூட்கேசுக்கு அடியில் மறைத்து கொண்டு வந்த ரூ.7 கோடி போதை பொருள் பறிமுதல் - சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பா?விசாரணை


கோவை விமான நிலையத்தில் சூட்கேசுக்கு அடியில் மறைத்து கொண்டு வந்த ரூ.7 கோடி போதை பொருள் பறிமுதல் - சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பா?விசாரணை
x
தினத்தந்தி 6 Dec 2020 8:45 PM IST (Updated: 6 Dec 2020 8:40 PM IST)
t-max-icont-min-icon

கோவை விமானநிலையத்தில், சூட்கேசுக்கு அடியில் மறைத்து கடத்த முயன்ற ரூ.7 கோடி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை,

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடான சார்ஜாவுக்கு தினமும் ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 4.10 மணிக்கு ஏர் அரேபியா விமானம் சார்ஜாவுக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்து சோதனைக்காக வரிசையில் காத்து நின்றனர். அவர்களின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) சோதனை செய்தனர்.

அப்போது திருச்சி மாவட்டம் துவாக்குடி பெரியார் நகரை சேர்ந்த நாகரத்தினம் (வயது 40) என்பவர் கொண்டு வந்த சூட்கேசை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அதில் ஒன்றும் சிக்கவில்லை. ஆனால் அந்த சூட்கேசின் அடிப்பகுதி சற்று பெரியதாக இருந்ததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அங்குள்ள நவீன ஸ்கேனர் கருவியில் அந்த சூட்கேசை வைத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், நாகரத்தினம் கொண்டு வந்த சூட்கேசின் அடிப்பகுதியில் மெத்தா பீட்டமைன் எனப்படும் போதை பொருளை மறைத்து சார்ஜாவுக்கு விமானத்தில் கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த சூட்கேசின் அடியில் 2 பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் மெத்தா பீட்டமைன் என்ற போதை பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.7 கோடி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக நாகரத்தினத்தை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது நாகரத்தினம் பாதுகாப்பு படையினரிடம் கூறுகையில், நான் சார்ஜாவுக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு வந்தேன். அங்கு எனது நண்பர்கள் அலிபாய், அருண் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர். இதில் அலிபாய் என்னிடம் ஒரு சூட்கேசை கொடுத்து சவுதிஅரேபியா கொண்டு செல். 2 நாட்கள் கழித்து அங்கு வந்து சூட்கேசை பெற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். இதனால் அந்த சூட்கேசில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் வாங்கி வந்து விட்டேன் என்றார்.

இதைத்தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், நாகரத்தினத்தை பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகரத்தினத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட போதை பொருளை சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் அலிபாய், அருண் ஆகியோரை பிடித்து விசாரித்தால் தான் போதை பொருள் எங்கு வாங்கப்பட்டது? அதை வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பல் எப்படி செயல்படுகிறது? என்பது தெரிய வரும். இதில், சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story