பாபர் மசூதி இடிப்பு தினம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்; கடைகள் அடைப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைவர் புகாரி சேட் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கனி, பொதுச்செயலாளர் ஹயாத் முகமது, செயலாளர் பர்கிட் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
பாபர் மசூதி இடத்தை மீண்டும் திருப்பி வழங்க வேண்டும். பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் செய்யது மைதீன், மின்னதுல்லாஹ், ஷேக், காதர் மீரான் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
கடையடைப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையம் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், பெட்டி கடைகள் மற்றும் விற்பனை அங்காடிகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பத்தமடை
பத்தமடையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பை தொகுதி தலைவர் அபுபக்கர் தலைமை தாங்கினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் இம்ரான் அலி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தென்காசி மாவட்ட தலைவர் ஜாபர் அலி பைஜி, மக்கள் தேசம் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சுகுமார், விமன் இந்தியா மூவ்மெண்ட் புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் ஆலிமா, நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர் சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷபி, மைதீன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் நயினா முகம்மது, அம்பை தொகுதி நிர்வாகிகள் ஜெய்லானி, அப்துல் சலாம், அகமது யாசின், வெள்ளாங்குளி செய்யது, முகம்மது அசனார், பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் முகம்மது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை பத்தமடை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை காமராஜர் சிலை முன்பு எஸ்.டி.பி.ஐ. ராதாபுரம் தொகுதி தலைவர் பாதுல் அஸ்கப் தலைமையில் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான், பொது செயலாளர் மீராஷா உள்பட 54 பேரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story