குடியிருப்பு கட்டிட மின் மீட்டரில் தீ விபத்து கரும்புகையால் மூச்சுத்திணறி முதியவர் சாவு - அம்பர்நாத்தில் பரிதாபம்
அம்பர்நாத்தில் குடியிருப்பு கட்டிட மின் மீட்டரில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் முதியவர் மூச்சுத்திணறி பலியானார்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் டவுண்ஷிப் பகுதியில் சென்ட்ரல் போலீஸ் நிலையம் உள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மின் மீட்டரில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்களில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் அங்கு ஏற்பட்ட கரும்புகை கட்டிடத்தில் உள்ள குடியிருப்புகளில் பரவியது. அப்போது, வீட்டில் அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கோபால் கிருஷ்ணன் நாயர்(வயது76) என்ற முதியவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் வெளி காற்றை சுவாசிக்க உடனே வீட்டில் இருந்து வெளியேறி மாடிக்கு செல்ல முயன்றார்.
அங்கு கதவு பூட்டி கிடந்ததால் வேறு வழியின்றி கட்டிடத்தின் கீழ் தளத்திற்கு வந்தார். அப்போது கரும்புகை காரணமாக மூச்சுத்திணறல் அதிகமாகி அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இது பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மயங்கி கிடந்த முதியவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே கோபால் கிருஷ்ணன் நாயர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story