மும்பை லால்பாக்கில் துயரம் அடுக்குமாடி வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் படுகாயம் 4 பேர் உயிருக்கு போராட்டம்


மும்பை லால்பாக்கில் துயரம் அடுக்குமாடி வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் படுகாயம் 4 பேர் உயிருக்கு போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2020 5:48 AM IST (Updated: 7 Dec 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

மும்பை லால்பாக்கில் உள்ள வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர். இதில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் குறித்த விவரம் வருமாறு.

மும்பை,

மும்பை லால்பாக் கணேஷ் கல்லி பகுதியில் சாராபாய் என்ற 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 2-வது மாடியில் உள்ள வீட்டில் நேற்று காலை 7.50 மணி அளவில் டமார் என்ற பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கட்டிடத்தின் சுவர் பெயர்ந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியும், தீக்காயம் அடைந்தும் வலியால் அலறினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கர் அங்கு சென்று மீட்பு பணியை பார்வையிட்டார்.

சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி சிறுவர், சிறுமிகள் உள்பட 16 பேர் காயமடைந்தது தெரியவந்தது. அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மசினா, பரேல் கே.இ.எம். மற்றும் குளோபல் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் 70 முதல் 95 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சமையல் கியாஸ் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதில் படுகாயமடைந்தவர்களின் பெயர்கள் வைசாலி ஹமான்சு(வயது44), திரிஷா (13), பிபின்(50), சூர்யகாந்த்(60), பிரதமேஷ் முங்கே(27), ரோஷன்(40), மங்கேஷ் ராணே (61), மகேஷ் முங்கே(56), சுசிலா பாக்ரே(62), தியான்தேவ் சாவந்த்(85), விநாயக் ஷிண்டே (75), ஓம் ஷிண்டே (20), யஷ் ராணே(19), கரீம்(45), மிகிர்சவான்(20), மம்தா முங்கே(48) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் காயம் அடைந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Next Story