கடையநல்லூர் அருகே லாரியில் கடத்திய ரூ.12 லட்சம் புகையிலை பறிமுதல்; 5 பேர் கைது
கடையநல்லூர் அருகே லாரியில் கடத்தி வந்த ரூ.12 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர்- பண்பொழி சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒதுக்குப்புறமாக லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அங்குள்ள குடோனில் இறக்குவதற்கு லாரி நிற்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் லாரியில் இருந்த 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் ஆலமரக்காட்டை சேர்ந்த குணசேகரன் மகன் டிரைவர் வினோத் (வயது 25), காசிமேஜர்புரம் தங்கராஜ் மகன் கணேஷ் பிரபு (36), முருகன் மகன் மதன்ராஜ், செங்கோட்டையை சேர்ந்த தங்கப்பன் மகன் அழகுமுத்து (28), அதே பகுதியை சேர்ந்த ராமர் மகன் இளங்கோ (21) என்பதும், லாரியை சோதனை செய்ததில் சேலத்தில் இருந்து செங்கோட்டை பகுதிகளுக்கு குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
5 பேர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். லாரியுடன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story