காரைக்குடி, நாட்டரசன்கோட்டை பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு; பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடிக்க அறிவுரை
காரைக்குடி, நாட்டரசன்கோட்டை பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
நாட்டரசன்கோட்டை
சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி திடீரென்று சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுவதை நேரில் பார்வையிட்டார். அத்துடன் அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்த்த கலெக்டர் அந்த தொட்டி சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? குடிநீரில் குளோரினேசன் எந்த அளவில் கலக்கப்படுகிறது? என கேட்டறிந்தார்.
அதன்பிறகு நாட்டரசன்கோட்டையில் உள்ள சமுதாய கூடம், உரப்பூங்காவையும் பார்த்தார். புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? என்று அளந்து பார்த்தார். கலெக்டருடன்
பேரூராட்சி செயல் அலுவலர் நீலமேகம் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
காரைக்குடி
காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டம், புதிய பஸ் நிலையம், அம்மா உணவகம், ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி, பழைய பஸ் நிலையம், சம்பை ஊற்றுப்பகுதி மற்றும் மழை பாதிப்பு உள்ள இடங்களில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகத்தில் உணவு அருந்தி வரும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சமையலறை மற்றும் உணவகத்தினை பார்வையிட்டார். பஸ் நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பாதாள சாக்கடை திட்ட பணிகள் விவரம் குறித்தும் கேட்டறிந்து அவற்றை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். மாவட்ட கலெக்டருடன் நகராட்சி ஆணையாளர் ரங்கராசு மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story