மகனை கொன்றதால் பழிக்குப்பழியாக வாலிபரை வெட்டிக்கொலை செய்தோம்; தந்தை பரபரப்பு வாக்குமூலம்
மகனை கொன்றதால் பழிக்குப்பழியாக வாலிபரை வெட்டிக் கொலை செய்தோம் என்று தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
வாலிபர் கொலை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் பகுதியை சேர்ந்தவர் அருள்மணி (வயது 47). இவரது மகன் எடிசன் (25) .இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு குறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (28), தேவகுமார் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த அவர்கள் 2 பேரும் சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.
சரண்
கடந்த மாதம் 25-ந் தேதி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த கோபிநாத்தை ஒரு கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்மணி, அவரது தம்பி அந்தோணிராஜ் ஆகியோரை தேடி வந்தனர். இதை அறிந்த 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
2 பேரையும் சூரமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அருள்மணி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
அருள்மணியின் மகன் எடிசன் பெண்களிடம் கிண்டல் செய்து உள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கோபிநாத்தும், தேவகுமாரும் சேர்ந்து எடிசனை கொலை செய்துள்ளனர். மேலும் எடிசன் அணிந்திருந்த ஆடையை கழற்றி நிர்வாண கோலத்தில் போட்டுவிட்டு சென்று உள்ளனர்.
மகனை கொலை செய்து நிர்வாண கோலத்தில் போட்டு சென்றவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்ய அருள்மணி திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி சம்பவத்தன்று போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த கோபிநாத்தை கொலை செய்து உள்ளனர்.
மேற்கண்டவாறு அருள்மணி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணை முடிந்து அருள்மணி, அந்தோணி ராஜ் ஆகிய இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story