பழனியில் தொடர்மழை: பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு அணைகள் நிரம்பின


பழனியில் தொடர்மழை: பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு அணைகள் நிரம்பின
x
தினத்தந்தி 7 Dec 2020 10:12 AM IST (Updated: 7 Dec 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஓடை, குளம், கண்மாய், அணை ஆகிய நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பழனி,

பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஓடை, குளம், கண்மாய், அணை ஆகிய நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி பழனி பகுதியில் உள்ள வரதமாநதி அணை நிரம்பி, அதில் இருந்து உபரிநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் வையாபுரிக்குளம் நிரம்பி அதில் இருந்து மறுகால் பாய்ந்து வருகிறது. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய அணையான பாலாறு-பொருந்தலாறு அணையும் தற்போது நிரம்பியுள்ளது. இந்த அணை, தனது மொத்த உயரமான 65 அடியில் 64 அடியை நேற்று எட்டியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து பாலாற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையும் தொடர் மழையால் நிரம்பியது. இதனால் அந்த அணையில் இருந்து உபரிநீர் மதகுகள் வழியே வெளியேற்றப்படுகிறது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக உள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு ஆகிய அணைகள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story