மழை காலங்களில் தண்ணீா் தேங்குவதை தடுக்க முடிச்சூர் பகுதியில் ரூ.71 கோடியில் திட்டம்; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


அமைச்சர் செங்கோட்டையன்
x
அமைச்சர் செங்கோட்டையன்
தினத்தந்தி 8 Dec 2020 4:17 AM IST (Updated: 8 Dec 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

இனிவரும் மழை காலங்களில் முடிச்சூர் பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வண்ணம் ரூ.71 கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் பல்வேறு துறைகளில் ‘நிவர்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதற்கான நிவாரண பணிகள் குறித்து அமைச்சர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது நிவாரண பணிகளை துரிதமாக எடுத்து பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் விரைந்து செயல்படுமாறு அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.71 கோடியில் திட்டம்
‘நிவர்’ புயல் ஏற்பட்டபோது முதல்-அமைச்சர் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது. இனிவரும் மழை காலங்களில் முடிச்சூர் பகுதியில் தண்ணீா் தேங்காமல் இருப்பதற்காக ரூ.71 கோடியில் நிதி ஒதுக்கி, ரூ.40 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் கட்டுவதற்கும், மழைநீரை சேகரிக்கப்பதற்கும் ரூ.31 கோடி மதிப்பில் 3 ஏரிகளில் 1½ டி.எம்.சி தண்ணீர் தேக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 9-ந் தேதி வரை மழை பெய்யும் என்று சொல்லிருக்கிறார்கள். ஆகையால் பள்ளி திறப்பு குறித்து பின்னர் யோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாம்பரத்தில் ஆய்வு
முன்னதாக ‘நிவர்’ புயலால் பல்லாவரம் பெருமாள் நகர், பொழிச்சலூர், குரோம்பேட்டை திருமலை நகர், தாம்பரம் சமத்துவ பெரியார் நகர், முடிச்சூர், அமுதம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, முன்னாள் எம்.பி.யும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், பரங்கிமலை ஒன்றிய செயலாளர் என்.சி.கிருஷ்ணன், முன்னாள் பல்லாவரம் எம்.எல்.ஏ. தன்சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story