8 மாதங்களுக்கு பிறகு கரூர் மாவட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்


8 மாதங்களுக்கு பிறகு கரூர் மாவட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2020 5:19 AM IST (Updated: 8 Dec 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

8 மாதங்களுக்கு பிறகு கரூர் மாவட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து வகுப்புகளுக்கு மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

கரூர்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வால் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் நடைபெற தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் பூட்டப்பட்ட கல்லூரிகள் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன.

கல்லூரிகளில் இளநிலை 3-ம் ஆண்டு படிக்கும் மற்றும் முதுநிலை 2-ம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் நேற்று கல்லூரிக்கு வந்தனர். இந்தநிலையில் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு கலை கல்லூரி நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து கல்லூரி வாசலில் பேராசிரியைகள் நின்று மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தினர். அப்போது மாணவிகள் முக கவசம் அணிந்தும், அடையாள அட்டையை அணிந்தும் வந்திருந்தனர்.

மகிழ்ச்சி

கல்லூரியில் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு சோதனை நடத்தப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி கொடுக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். மேலும் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிக்கு வந்த நிலையில் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அன்பை பரிமாறிக்கொண்டனர். இதேபோல தனியார் கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி

கரூர் அரசு மருத்துவக்கல்லூரியிலும் வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின. கல்லூரில் வந்த 150 மாணவ-மாணவிகளுக்கும் கல்லூரி வளாகத்தில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பேராசிரியர்கள், பேராசிரியைகள் எடுத்து கூறி கல்லூரிக்குள் அனுமதித்தனர். மேலும், மாணவ-மாணவிகள் முகவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கல்லூரிக்கு வந்தனர். மேலும் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story