படைவீரர் கொடி நாள் நிதி: நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்


நெல்லையில் படைவீரர் கொடி நாள் நிதியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்த போது எடுத்த படம்
x
நெல்லையில் படைவீரர் கொடி நாள் நிதியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்த போது எடுத்த படம்
தினத்தந்தி 8 Dec 2020 5:30 AM IST (Updated: 8 Dec 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் படைவீரர் கொடி நாள் நிதியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

கொடிநாள் நிதி
முப்படைகளை சேர்ந்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவும், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டும், உள்நாட்டு கலவரத்தின்போது அமைதியை நிலைநாட்டும் வகையிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களது தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அப்போது திரட்டப்படும் நிதியில் இருந்து போரில் ஊனமுற்ற படை வீரர்கள், போரில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஆகியோரின் நலனுக்காகவும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவை நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்
கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் கொடிநாள் நிதி இலக்காக ரூ.40 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கலெக்டரின் முயற்சியால் ரூ.50 லட்சத்து 94 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டில் ரூ.40 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கொடி நாள் வசூலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல இயக்குனர் முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகா கிருஷ்ணன், ஊர்க்காவல் படை தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு
முன்னதாக நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. அப்போது 18 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டை வழங்கப்பட்டது. பொது நூலகத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 3 பேருக்கு நூலக விருது, அரசு ஊழியர் வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. இவற்றை கலெக்டர் விஷ்ணு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட வழங்கல் அலுவலர் நடேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story