முன்னாள் மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ஜஸ்வந்த்சிங் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்


முன்னாள் மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ஜஸ்வந்த்சிங் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
x
தினத்தந்தி 8 Dec 2020 6:05 AM IST (Updated: 8 Dec 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ஜஸ்வந்த்சிங் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கொரோனா பீதிக்கு இடையே திட்டமிட்டப்படி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ஜஸ்வந்த்சிங், முன்னாள் மந்திரி ஒய்.நாகப்பா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பசவந்த் ஐரோஜி பட்டீல், கே.மல்லப்பா, ரதன்குமார் கட்டிமார், எழுத்தாளர்கள் ஜி.எஸ்.ஆமுர், ரவி பெலகெரே, கல்வியாளர் வி.எஸ்.சோந்தே ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரங்கல் தீர்மானம் மீது சபாநாயகர் காகேரி பேசுகையில், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உள்பட முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் எழுத்தாளர்களின் மறைவால் இந்த சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், தலித் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தினார். அவர் மந்திரியாக பணியாற்றியபோது ஏழை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். முன்னாள் மந்திரி ஒய்.நாகப்பா பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தவர். மூன்று முறை இந்த சபை உறுப்பினராக பணியாற்றினார். மந்திரியாகவும் சிறப்பான முறையில் பணியாற்றி மக்கள் சேவையாற்றினார். 5 ஆயிரம் வீடுகளை கட்டி ஏழை மக்களுக்கு வழங்கிய பெருமை அவரை சாரும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பல்வேறு உறுப்பினர்கள் இரங்கல் தீர்மானத்தின் கீழ் பேசினர். அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த இரங்கல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் நகல், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

கூட்டத்தொடரில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். விதான சவுதா நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தானியங்கி எந்திரம் மூலம் சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வசதியாக விதான சவுதாவில் ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேவைப்படுவோர் அங்கு சென்று தங்களின் சளி மாதிரியை கொரோனா பரிசோதனைக்கு வழங்கலாம் என்று சபாநாயகர் தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக சட்டசபை நிகழ்வுகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே விதான சவுதாவில் அனுமதி வழங்கப்படுகிறது.

குளிர்கால கூட்டத்தொடரையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் முழு அடைப்புக்கு ஆதரவு வழங்கி போராட்டத்தில் குதிப்பதால், விதான சவுதா சுற்றிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story