விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு: புதுச்சேரியில் இன்று பஸ், ஆட்டோக்கள் ஓடாது கடைகள், ஓட்டல்கள் மூடப்படும்


விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு: புதுச்சேரியில் இன்று பஸ், ஆட்டோக்கள் ஓடாது கடைகள், ஓட்டல்கள் மூடப்படும்
x
தினத்தந்தி 8 Dec 2020 7:14 AM IST (Updated: 8 Dec 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படுவதையொட்டி புதுச் சேரியில் இன்று பஸ், ஆட்டோக்கள் ஓடாது. கடைகள், ஓட்டல்கள் மூடப்படுகின்றன.

புதுச்சேரி, 

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவற்றை வாபஸ் பெறக் கோரியும் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கம் மற்றும் சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம், புதுச்சேரியிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடக்கிறது.

புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினரும் ஆதரவு அளித்துள்ளனர். வணிகர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் ஆதரவு திரட்டி உள்ளனர். முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீதிவீதியாக சென்று வாகனம் மூலம் பிரசாரம் செய்தனர். மேலும் புதிய பஸ் நிலையம், திருக்கனூர், மதகடிப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட 7 இடங்களில் இன்று அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விதை உற்பத்தியாளர் சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முழு அடைப்பு காரணமாக புதுவையில் இன்று பஸ், ஆட்டோ, டெம்போ எதுவும் ஓடாது. பி.ஆர்.டி.சி. போக்குவரத்து சேவையும் முழுமையாக இருக்காது. அதேநேரத்தில் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லை வரை இயக்கப்படும் என்று தெரிகிறது. வேளாண் சார்ந்த போராட்டம் என்பதால் வர்த்தக சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டிருக்கும்.

பள்ளி, கல்லூரி நிறுவனங்களிடமும் போராட்டக்குழு ஆதரவு கேட்டு இருப்பதால் அவையும் இயங்காது. ஆனால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல் திறந்து இருக்கும்.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பா விதம் ஏதும் ஏற்படாத வண்ணம் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் உத்தரவின்பேரில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.


Next Story