மின்துறை தனியார்மயமாகும் விவகாரம்: பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் கைவிரிப்பு ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது
தனியார்மயமாக்கும் விவகாரம் குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் கைவிரித்ததால் மின்துறை ஊழியர்களின் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழுவை உருவாக்கி புதுவை மின்துறை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 4-ந் தேதி முதல் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தையொட்டி மழையால் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்ய மறுப்பதால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனால் ஆத்திரமடைந்து பொதுமக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு வருவதால் இந்த விவகாரம் பூதாகரமாக திசை திரும்பி உள்ளது.
மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவின்பேரில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மின்துறை செயலர் சுர்பீர் சிங், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி, அதிகாரிகள் சண்முகம், ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசுவாமி, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன், போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற்றது. அப்போது மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழுவினர் மின்துறை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அரசு அதிகாரிகள் தரப்பில், மத்திய அரசின் முடிவை நிறுத்தி வைக்க எங்களுக்கு அதிகாரமில்லை என கைவிரித்து விட்டனர். இதனால் 3½ மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டவில்லை.
அதையடுத்து மின்துறை ஊழியர்களின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது நாளாக தொடரும் என அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story