கலெக்டர் அலுவலகத்துக்கு முளைத்த நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்


கலெக்டர் அலுவலகத்துக்கு முளைத்த நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Dec 2020 7:32 AM IST (Updated: 8 Dec 2020 7:32 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் தொடர்மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் முளைத்தன. அந்த பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்தது. அதன் பின்னரும் தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையினால் அறுடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இளம்நெற்பயிர்களும் நீரில் மூழ்கி அழுகி காணப்படுகின்றன. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் முளைத்து காணப்படுகின்றன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா உளூர் மேற்கு, உளூர் கிழக்கு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் தலைமையில் சீனிசம்பத்வாண்டையார் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

நெல் முளைத்தன

விவசாயிகள் அழுகிய நெற்பயிர்கள் மற்றும், நீரில் மூழ்கி முளைத்த அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த பலத்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் அழுகி காணப்படுகிறது. மேலும் நெற்பயிர்கள் முளைத்து காணப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் இழப்பீடு

இந்த சேதங்களால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளாகிய எங்களின் நலன் கருதி மேற்படி சேதங்களை கலெக்டர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்தனர். 10 நாட்களில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் மழையினால் கடும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

எனவே கலெக்டர் பார்வையிட்டு, உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் ஒரத்தநாடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story