8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு: பாதுகாப்பு அம்சங்களைபின்பற்றி மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்


8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு: பாதுகாப்பு அம்சங்களைபின்பற்றி மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 8 Dec 2020 2:12 AM GMT (Updated: 8 Dec 2020 2:12 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதில் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வந்தனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்,

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. இன்நிலையில் கல்லூரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த 2-ந்தேதி முதல் தொடங்கின. தொடர்ந்து கலை ,அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளும், அவர்களுக்கான விடுதிகளும் நேற்று முதல் தொடங்கப்பட்டது.

இதையொட்டி, கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதை பின்பற்றி, கல்லூரிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைக்கு பிறகே அனுமதி

இதையொட்டி அரசு வகுத்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கல்லூரிகளில் தனிமனித இடைவெளி, முகக்கவசம், உடல் வெப்பநிலை பரிசோதனை, சானிடைசர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன. கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நுழைவுவாயிலில் நிறுத்தி சானிடைசர் திரவத்தை பயன்படுத்த வைத்து பின்னர் அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே கல்லூரிக்குள் சென்றனர்.

மாணவர்களின் வருகை குறைவு

8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாணவ- மாணவிகளின் வருகை குறைவாகவே இருந்தது. இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கல்வி கற்பிக்கும் வகையில் ஒரு வகுப்பறைக்கு 20 முதல் 25 மாணவர்கள் வரை அமருவதற்கு ஏற்றபடி வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கனவே ஆன்லைன் மூலம் நடத்தும் வகுப்புகளும் தொடர்ந்து நடப்பதால் கல்லூரிக்கு வர இயலாத மாணவ- மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்தினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில தனியார் கல்லூரிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின.

Next Story